×

நல்லன எல்லாம் தரும் நவநரசிம்மர்கள்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம் - 7

4. பாவன நரசிம்மர். புத தோஷம் போக்கும் சந்நதி. கருடாத்ரி மலையின் தென்புறம். அடர்ந்த காட்டுப்பகுதியில். பாவன நதிக்கரையில் அமைந்திருக்கிறது பாவன நரசிம்மர் ஆலயம். ஒன்பது நரசிம்மர்களில் இந்த ஆலயத்துக்குச் செல்லும் பயணம் மிகவும் கடினமானது. மூங்கில் காடுகளினூடே சீரற்ற பாதை, நடந்து சென்றால் மூங்கில் முட்கள் குத்தி காயப்படுத்தும். 16. கி.மீ ஜீப், டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமேசெல்லக்கூடிய கரடுமுரடான மண்பாதையில் வேறு ஏதாவது வாகனங்களில் சென்றால், எலும்புகள் கழன்றுபோவது போல் உதறும்.

அந்த அளவுக்கு கரடுமுரடான பாதை. ஆனாலும் இந்த நரசிம்மரைத் தரிசிக்க அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். முந்தின நாளே புறப்பட்டு மிகக் கடினமான ஆறேழு கிலோ மீட்டர்களைக் கடந்து, திறந்தவெளியில் மரத்தடியில் இரவைக் கழித்து தரிசனம் முடித்துச் செல்லத் தயாராயிருக்கிறார்கள்.

அப்படி வரும் பக்தர்களில் பலர் கைகளிலும் சிறுகூடைகளிலும் கோழிகளையும், சேவல்களையும் பலி கொடுப்பதற்காக எடுத்து வருகின்றனர். பலிகளை நரசிம்மர் ஏற்பாரா? இங்கே புழங்கும் நாட்டுப்புறக் கதை இதற்கு நல்ல பதில் தருகிறது. கிருத யுகத்தில் இந்த மலைத் தொடர்களில் செஞ்சு என்றழைக்கப்பட்ட மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்து வந்திருக்கின்றனர். ஏழ்மையான குடும்பங்கள், காட்டில் வேட்டையாடி பசி தீர்த்துக் கொள்ளும் மக்கள், வெளியுலகில் இருப்பவர்களுடன் வீண்வம்புக்குப் போகாத அமைதியான காட்டு மக்கள், அந்தக் குடும்பங்களில் பிறந்தவர்தான் செஞ்சு லட்சுமி, திருமகளின் மறு அவதாரமாக தோன்றியவள்.

பருவ வயதில் அவளையொத்த அழகிகள் யாருமிலர். அவள் கரம் பற்ற, ஆண்களுக்கிடையே போட்டா போட்டி, ஆனால் செஞ்சுலட்சுமிக்கோ ஸ்ரீ நாராயணன் பேரில் அளவில்லாக் காதல்! அஹோபில மலைகளில், பிரகலாதனுக்காக நரசிம்மர் அவதாரம் எடுத்தபோது, நரசிம்மரின் பார்வையில் இந்த செஞ்சுலட்சுமி தென்பட்டாள். காண்பவர் எல்லாம் நரசிம்மரின் கோரமுகம் பார்த்து நடுநடுங்கி ஒளிய, செஞ்சுலட்சுமி மட்டும் அவரைத் தரிசித்தும் நாணத்தால் தலைகுனிந்து நின்றாள். இந்த அவதாரத்தில் தனக்கிணையான துணை இவள்தான் என்று தீர்மானித்தார் நரசிம்மர். அவளைத் தன் துணையாக்கி, மலைவாழ் மக்களுக்குப் பெரும் அந்தஸ்து தந்தார். தன் பிரியமான மனைவிக்காக மாமிச உணவை வேட்டையாடிக் கொணர்ந்து கொடுத்தார். தங்களில் ஒருத்தியாகப் பிறந்து வளர்ந்து. நரசிம்மரின் கரம் பற்றிய அன்னை செஞ்சுலட்மிக்குப் பிரியமான உணவைப் படைப்பதற்காகவே இந்த மலைவாழ் இன மக்கள் இங்கே சனிக்கிழமைகளில் பலி கொடுத்து வணங்குகிறார்கள்.

பரம்பரை பரம்பரையாகச் சனிக்கிழமைகளில் நரசிம்மருக்குப்பலி கொடுப்பதற்காக இங்கே வரும் குடும்பங்கள் உண்டு. பாவன நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆலயத்தில் ஏழுதலை ஆதிசேஷன் படமெடுத்துக் குடை பிடித்திருக்க, வீற்றிருக்கும் நிலையில் இருக்கிறார் லட்சுமி நரசிம்மர். வலது மேற்கரத்தில் சக்கரம், இடது மேற்கரத்தில் சங்கு, அன்னை லட்சுமியைத் தன் இடது மடியில் இருத்தி சாந்தரூபமாகக் காட்சியளிக்கிறார். இடது திருக்காலை மடக்கி, வலது திருக்காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் நரசிம்மர் இங்கே தரிசனம் தருகிறார். வலது கீழ்க்கரம் சரணம் புரியும் பக்தர்களுக்கு அருளும் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம். இடது தொடையில் வீற்றிருக்கும் அன்னை லட்சுமியைச் சுற்றி வளைத்திருக்கிறது.  கருடாத்ரி மலையின் தென்புறம் பாவன நதிக்கரையில்  எழுந்தருளியுள்ளார். புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்களைப் போக்குகிறார்.

5. அஹோபில நரசிம்மசுவாமி.   குருதோஷம் நீக்கும் சந்நதி

கீழ் அஹோபிலத்திலிருந்து மேல் அஹோபிலம் சென்றடைய எட்டு கிலோ மீட்டர் தொலைவில் வனமடர்ந்த சூழ்நிலையில் வாகனங்கள் செல்ல பாதை போடப்பட்டுள்ளது. மேல் அஹோபில மலை கடல் மட்டத்திலிருந்து இரண்டாயிரத்து எண்ணூறு அடி உயரத்தில் இயற்கைக் காட்சிகளுடன் மனதைக் கவர்கிறது. அஹோபில நரசிம்ம ஸ்வாமி எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு, சிங்கவேள் குன்றம் என்பதற்குரிய கம்பீரத்துடன் காட்சி தருகிறது. இவரே இத்தலத்தின் முதன்மையான மூர்த்தி. ராமபிரான் ஐந்து பாக்களால் இவரைப்போற்றிப் பாடிய துதி பஞ்சாம்ருத ஸ்தோத்திரம் என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள சிறிய குகையில் பாறையின் மேல் ஸ்வயம்புவாக நரசிம்ம ஸ்வாமி நெஞ்சில் நிறைகிறார். தாயார் செஞ்சுலக்ஷ்மி தனது தயாபர குணத்தை தன்னை தரிசிப்பவர்களுக்குத் தந்தருள்கிறார். கலையழகு மிளிரும் மண்டபங்கள் நிறைந்த திருக்கோயிலில் கிழக்கே ‘பாவநாசினி’ என்ற ஒரு சிறிய நதி நமது பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கருடாத்ரி, வேதாத்ரி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பாவநாசினி நதிக்கரையில் அமைந்துள்ளது அஹோபில நரசிம்மர் ஆலயம்.

இதுவே மேல் அஹோபிலத்தின் பிரதான ஆலயமாகக் கருதப்படுகிறது. கீழ் அஹோபிலத்திலிருந்து 8 கி.மீ மலைப்பயணத்திற்குப்பின், கடல் மட்டத்திலிருந்து 2,800 அடி உயரத்தில் மேல் அஹோபிலம் வந்ததும் அமைந்துள்ள ஆலயம் இது. நவநரசிம்மர்களில் அதிகச் சிரமமில்லாமல் சென்று தரிசிக்கக்கூடியது. எளிமையான சிறு கோபுரம் சமநிலத்தில் நேரெதிரே, நூறடி தள்ளி உற்சவ மண்டபம். ஆலயம் ஒரே தளமாக இல்லாமல் குன்றத்தின் அமைப்புக்கேற்ப ஏற்ற இறக்கத்துடன் பரந்திருக்கிறது. இந்த நரசிம்மர் ஹிரண்யனின் உடலைக் கிழிக்கும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

வாய் போன்ற குறுகலான குகை அமைப்பு, குகையின் மத்தியில் ‘அஹோபில நரசிம்மர்’ உருவத்தில் சிறியவராக இருந்தாலும் நரசிம்மரின் உக்கிரம் அதிகம். மூலவருக்கு அருகிலேயே லக்ஷ்மி சமேதராக உற்சவர், நேரெதிரில் மாட  சந்நதியில் பிரகலாதன். மூலவர் சுயம்புவாகத் தோன்றிய மூர்த்தி. உக்கிர ரூபம், ஹிரணயவதம் முடிந்ததும், தன் ஆக்ரோஷ வடிவத்துடன் இந்தக் குகையில் வந்து தேவர்களுக்கும் கருடனுக்கும் காட்சியளித்தார்.

சீதையைத் தேடி ராமர் அலைந்தபோது இங்கே வந்து நரசிம்மரை பூஜித்து வணங்கினார். குகையின் இன்னொரு புறத்தில் ஆச்சரியமாக ஒரு சிவலிங்கம், ஆதிசங்தரர் காபாலிகர்களிடம் தன் கரத்தை இழந்தபோது இங்கே வந்து ‘லக்ஷ்மி நரசிம்மகராவலம்ப ஸ்தோத்திரம்’. இயற்றினார். இழந்த கரம் மீண்டது. தன் வருகையை நிலைநிறுத்த இங்கே ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்த நரசிம்மசுதர்சன சக்கரத்தையும் இங்கு காண முடிகிறது.

இதையடுத்து மகாலக்ஷ்மியின் அம்சமான செஞ்சுலக்ஷ்மித் தாயார் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் சந்நதி அமைந்திருக்கிறது. இன்றைய வசதிகள் இல்லாமல், பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்த இடுக்கான இருள் குகைக்கு வந்து தரிசித்துச் சென்ற ஆன்மிகப் பெரியவர்கள் எண்ணி உள்ளம் வியக்கிறது. தீர்த்தம் வழங்கப்படுகிறது. சடாரி சாத்தப்படுகிறது. சந்நதிக்கு வௌியே பக்தர்களின் பாதங்கள் பட்டுவிடக்கூடாது என்று இரும்புத் தடுப்புக்குள் வட்டமாக ஒரு பகுதி, இங்கே என்ன மர்மம் புதைந்திருக்கிறது?  ஆர்வம் விசாரிக்க சொல்கிறது. இது வெகு காலமாகத் திறந்த குகையாக இருந்தது. உள்ளே இருள் மண்டிக்கிடக்கும். பாதாளத்தில் இதே போன்றதொரு ஆலயம் இருந்தது என்று சொல்லப்படுகிறது.

பதினாறாம் நாற்றாண்டுத் துவக்கத்தில் (15-13), இங்கு ஆறாம் ஜீயராக இருந்த ஸ்ரீ பராங்குச யதீந்திர மகா தேசிகர் இந்தக் குகைக்குள் இறங்கிப் போனார். வைகுந்தனைத் தரிசித்துவிட்டு அவர் வெளியே வரவில்லை. அதன் பின் அந்த குகை மூடப்பட்டுவிட்டது. வெளியே உக்கிரமான வெயில் தகித்தாலும் குகைக்குள் சூழ்ந்த ஆலயத்தினுள் குளுமையாக இருக்கிறது. சந்தனமும், சுகந்தப் புகைகளும் மணக்கின்றன.

ஆலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தின் மேல் தளத்தில் அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் மேலும் ஒரு பதினாறு கால் மண்டபம், அங்கிருந்து கோபுர தரிசனம். அங்கு நின்று சுற்றிலுமுள்ள மலைக் குன்றங்களைக் காணக்காண.... இயற்கை ரகசியமாகப் பொத்தி வைத்திருக்கும் மற்ற நரசிம்மர்களை அடுத்து தரிசிக்கப் போகும் ஆர்வம் செலுத்துகிறது. கீழ் அஹோபிலத்திலிருந்து 8 கி.மீ. மலையின் உச்சியில் மேல் அஹோபிலத்தில் இந்த நரசிம்மர் அமைந்துள்ளார்.

ஸ்வயம் வ்யக்த (தானாகவே தோன்றி) இந்த ஸ்ரீ நரசிம்மப் பெருமானை கருடன் வழிபட்டு வந்தால் இந்தத் திருத்தலத்திற்கு கருடாத்ரி என்ற பெயரும் உண்டு. பிரம்மாவும் மற்ற தேவர்களும் இத்திருத் தலத்திற்கே வந்து ஸ்ரீ நரசிம்மப்பெருமானை வணங்கியதாகப் புராணம் கூறுகிறது. ஹிரண்யகசிபுவை வதைத்த  பிறகு கடுங்கோபமாக இருந்தவர் பின்னர் கோபம் குறைந்து சாந்தியடைந்து தாயார் ஸ்ரீ மகாலட்சுமியுடன் அஹோபிலத்தில் பிரகலாதனுக்கும் மற்றவர்களுக்கும் தரிசனமளித்தார் என்பதும் வரலாறு குரு தோஷத்தால் ஏற்படும் கேடுகளை உடனடியாகப் போக்கியருள்கிறார் ஸ்ரீ அஹோபில நரசிம்மர். இவர் தன்னை வழிபடுபவர்களின் தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்களின் தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து காத்தருள்கிறார். சிறந்த தொழிலதிபர்களை உருவாக்குகிறார். மனபயத்தை போக்கித் தைரியத்தை அளிக்கிறார்.

6. ‘மாலோல நரசிம்மர்’. சுக்கிர தோஷம் போக்கும் சந்நதி.

லட்சுமி க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுவது வேதாத்ரி பர்வதம். இந்த மலைக் குன்றங்களில் கனகபாயா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. மாலோலரின் சிறு குகை ஆலயம். நரசிம்மரின் கோபம் தணிந்து, மகாலட்சுமி அவருடன் எழுந்தருளிய தலம் இது. ‘மா’ என்பது அன்னை லட்சுமியைக் குறிக்கிறது. லோலம் என்றால் காதல் என்று பொருள். அன்னையைத் தன் இடது மடியில் இருத்தி சௌம்ய ரூபமாக இடது திருக்காலை மடக்கி, வலது திருக்காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் நரசிம்மர் இங்கு வீற்றிருக்கிறார். வலது மேற்கரத்தில் சக்ரம், இடது மேற்கரத்தில் சங்கு, வலது கீழ்க்கரம் அருள் புரியும் அபய ஹஸ்தம், இடது கீழ்க்கரம், இடது தொடையில் வீற்றிருக்கும் மகாலட்சுமியைச் சுற்றி அணைத்த திருக்கோலம்.

மாலோல நரசிம்மருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நவ நரசிம்மர்களில் எந்த மூர்த்தியை அடிப்படையாக வைத்து உற்சவரை அமைப்பது  என்ற கேள்வி எழுந்தபோது, முதலாம் ஜீயரின் கனவில் நாராயணன். மாலோல நரசிம்மராகக் காட்சியளித்து சந்தேகத்தைத் தீர்த்து வைத்ததாகவும் ஒரு சிறப்பு உண்டு. இன்றைக்கும் ஜீயர்கள் மாலோல நரசிம்மரின் விக்கிரத்தையே உற்சவ மூர்த்திகளாக ஆன்மிக யாத்திரைகள் போகு மிடங்களுக்கெல்லாம் எடுத்துப் போகிறார்கள். உற்சவருக்குத் தினசரி பூஜைகள் செய்து வருகிறார்கள். சுக்கிர கிரகத்தினால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் இவர் நீக்கியருள்கிறார். மனபயத்தையும் போக்கித் தைரியத்தை அருள்கிறார்.

7. யோகானந்த நரசிம்மர்.  சனி தோஷம் போக்கும் சந்நதி.

வேதாத்ரி மலைத்தொடரின் மேற்கில்  2 கி.மீ. தொலையில் அமைந்திருக்கிறது. யோக நரசிம்மரின் ஆலயம், மரங்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இந்த எளிமையான ஆலயத்தில் நரசிம்மர் யோக முத்திரை தரித்துக் காட்சியளிக்கிறார். ஹிரண்ய வதம் முடிந்ததும் பிரஹ்லாதனுக்கு நரசிம்மர் சில யோக முத்திரைகளைக் கற்பித்தார். அதன் ஒரு நிலையே இங்கு எழுந்தருளியிருக்கும் திருக்கோலம். நரசிம்மர் தென்திசை நோக்கி வீற்றிருக்கிறார். மேற்கரங்கள் இரண்டும் சங்கும் சக்கரமும் ஏந்தியிருக்கின்றன கீழ்க்கரங்கள் இரண்டிலும் இரு கால்களிலும் யோக முத்திரை பதித்திருக்கின்றன. தன்னை வணங்குவோர்க்கு சனீஸ்வர கிரகத்தால் ஏற்படும் சகல தோஷங்களைப் போக்குபவர் இவர்.

8.ஸ்ரீவராக (க்ரோட)நரசிம்மர்,  ராகு தோஷம் நீக்கும் சந்நதி.

மேல் அஹோபிலம் ந்ருஸிம்ஹ ஸ்வாமி திருக்கோயிலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மலை வழிப்பாதையாக சென்றடைந்தால் வராஹ ந்ருஸிம்ஹ ஸ்வாமியை வந்தனம் செய்யலாம். வராஹ மூர்த்தமுடன் மகாலட்சுமியுடன் தரிசனம் தருகிறார். இந்த  ‘க்ரோட நரசிம்மர்’ , இரண்டு அவதாரங்களின் கலவையாக வித்தியாசமாகக் காட்சியளிக்கிறார். சகல கலைகள், இயல், இசை, நாடகத்துறைகள், வாசனை திரவியங்கள், மந்திரசித்தி, நவரத்தின, கனகாபரணங்கள். நல்ல செழிப்பான இல்லங்களில் வாழும் பாக்கியம் மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளவல்லவர். ராகுவினால் ஏற்படும் தோஷங்களையும் நீக்க வல்லவர் ஸ்ரீ வராக நரசிம்மர். நீதித்துறை, வேதங்கள் ஆகிய துறைகளில் உயர்ந்த நிலையை அருளவல்லவர்.

9. சத்ரவட நரசிம்மர். கேது தோஷம் நீக்கும் சந்நதி.

கருடாத்ரி மலையில், கீழ் அஹோபிலம் ஆலயத்துக்கு அருகில் கிழக்குத் திசையில் அமைந்திருக்கிறது. சத்ரவட நரசிம்மரின் ஆலயம். இயற்கையின் சூழல், மேற்கு வானம் பின்னணியில் அழகான திரையாக விரிந்திருக்கிறது. கரடு முரடான பாதைகளுக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும் பாதங்கள், சீரான தார்ச்சாலை வழியே ஆலயத்தைச் சென்றடைய வழி இருப்பது கண்டு துள்ளுநடை போடுகின்றன.

ஆறு கால் முக மண்டபம், தூண்களில் ஆஞ்சநேயரின் அழகிய சிற்பங்கள் தவிர வெவ்வேறு  நரசிம்மர் சிற்பங்கள். அஹோபில நரசிம்மர்களிலேயே மிகவும் சுந்தர ரூபத்துடன் காணப்படுபவர் சத்ரவட நரசிம்மர், குடை போன்ற ஆலமரத்தடியில் வீற்ற நிலையில் காட்சி தந்ததால், நரசிம்மருக்கு இந்தத் திருநாமம் (சத்ர- குடை வடம்- ஆலம்). அலங்கார புருஷராக, ஆபரணங்கள் தரித்த நரசிம்மர். இரண்டு மேற்கரங்களும் சங்கு, சக்கரங்களைத் தரித்திருக்கின்றன.

வலது கீழ்கரம் அபயஹஸ்தமாக அருட்பாலிக்கிறது. இடது கீழ்கரம் இடது தொடையில் முத்திரையாகப் பதிந்திருக்கிறது. தேவசபையில் ஆஹா, ஊஹூ என்று இரண்டு கந்தர்வ இசைக் கலைஞர்கள். ஹிரண்ய வதம் முடித்து, உக்கிர நிலையில் இருக்கும் நரசிம்மரை அமைதிப்படுத்த. இந்த இரண்டு கந்தர்வர்களும் தங்கள் இசையால் முனைந்தனர். அவர்கள் இன்னிசையை ரசித்து, நரசிம்மர் தன் தொடையில் தாளம் போடுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

 ஆஹா,ஊஹு இருவரின் திருவுருவங்களும் இங்கு அமையப் பெற்றுள்ளன. இவர் கேதுவினால் ஏற்படும் சகல தோஷங்களைப் போக்கியருள்கிறார். நாட்டின் தலைமைப் பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரம், நீதி தவறாத பரிபாலனம் ஆகியவற்றை வழங்கவல்லவர். சத்ரவட மரத்தின் கீழ் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பத்மாசனக் கோலம் கொண்டு பேரழகுடன் காட்சி தரும் மூர்த்தி இவர்.

உக்ரஸ்தம்பம் நவ நரசிம்மர்களை தரிசித்து  விட்டு மேல் அஹோபிலத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் மலை உச்சியில் இருக்கும் உக்ரஸ்தம்பத்தை அடையலாம். இரண்டு மலைகளைப் பிளந்துள்ள நிலையில் காணப்படும் உக்ரஸ்தம்பத்தை மலையின் கீழிருந்து பார்த்தால் நரசிம்ம ஸ்வாமியைப் போல தோற்றம் அளிக்கிறது. இந்த உக்ரஸ்தம்பத்தை காணச்செல்வது எளிதான செயல் அல்ல. இறையருள் இருந்தாலே இதை தரிசிக்க முடியும்.

பிரகலாத மேடு மேல் அஹோபிலத்திலிருந்து உக்ரஸ்தம்பம் செல்லும் வழியிலிருக்கும் குகையை பிரகலாத மேடு என்று அழைக்கின்றனர். பிரகலாதனுக்காக உருவாக்கப்பட்ட இடம் இது. இங்குள்ள குகையில் பிரகலாதனுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட புராணத்தில் வர்ணிக்கப்படுகின்ற அஹோபில தரிசனம் அகம் சுகம் தரும்! ஆலயத்தின் உற்சவங்கள் 1.சுவாதி, 2. ஏகாதசி 3. அமாவாசை 4 பௌர்ணமி5.மாச பிறப்பு 6. நவராத்திரி 7 பவித்தோஸ்வம் 8. கார்த்திகை தீபம் 9 தனுர் மாசம் (வைகுண்ட ஏகாதசி) பார்வேட்டை.

இருப்பிடம்: ஆந்திரா மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அஹோபிலம் இருக்கிறது. ஐதராபத்திலிருந்து 330 கி.மீ., கடப்பாவிலிருந்து 112 கி.மீ... நந்தியாலிலிருந்து 65 கி.மீ. எந்த ஊரிலிருந்து வந்தாலும் அல்லகட்டா என்ற ஊரைக் கடந்துதான் அஹோபிலம் போக வேண்டும். இங்கிருந்து அஹோபிலம் 24 கி.மீ. தொலைவில் உள்ளது.

ந.பரணிகுமார்

(தரிசனம் தொடரும்)

Tags : Nona Narasimha ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?