சென்னை: கட்சியை விட்டு விலகும்படி எடப்பாடியை எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் கொளத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என கூறி எடப்பாடி பழனிசாமி அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு முடிந்தவுடன் இரு அணியினரும் தனித்தனியாக செயல்பட தொடங்கி தொடர்ந்து இரு அணியினரும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பேட்டி கொடுக்கவும் வசை பாடியும் வந்தனர். இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளரான அதிமுக இளைஞரணி வடசென்னை மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கொளத்தூர் அகரம் சந்திப்பு பகுதியில் இபிஎஸ் அணியினருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் `இபிஎஸ் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். ஜெயலலிதா நடத்தி வந்த கட்சியில் அவருக்கு இடம் இல்லை. அவரது துரோக மனப்பான்மையை ஒருபோதும் அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்’ என கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ேபசுகையில், `அதிமுகவிற்கு ஒற்றை தலைமை என்று இருந்தால் அது ஓபிஎஸ் மட்டும் தான். இபிஎஸ் துரோகத்தின் அடையாளமாக செயல்படுகிறார். அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் மட்டும் தற்போது அவரை சுற்றி உள்ளனர். அவர்களை வைத்துக்கொண்டு அவர்கள் தான் கட்சி என தீர்மானித்து விட முடியாது. ஒவ்வொரு அதிமுக தொண்டனும் ஓபிஎஸ் இடம் இருக்கின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கன்னியாகுமரி வரை தொடர்ந்து நடைபெறும்’ என தெரிவித்தார்….
The post கட்சியை விட்டு விலகும்படி எடப்பாடியை எதிர்த்து ஓபிஎஸ் அணி கொளத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.