மக்களை காக்கும் சித்தூர் சாஸ்தா தென்கரை மகாராஜன்

நெல்லை மாவட்டம் வள்ளியூரிலிருந்து கிழக்கில் 15 கி.மீட்டர் தொலைவில் சித்தூரில் மகாராஜா கோயில் உள்ளது. நம்பியாற்றின் தென்கரையை அடையாளமாக காட்டப்படுவதால் தென்கரை மகாராஜா கோயில் என்றழைக்கப்படுகிறது. சித்தூரின் பழைய பெயர் வன்னிகளத்தி என்பது வாய்மொழியாக கூறும் மரபாகும். தென்கரை மகாராஜன் சாஸ்தா சபரிமலை சுவாமி ஐயப்பனின் தம்பியாக கருதப்படுகிறார். சாஸ்தாவின் துணை தெய்வங்களான பூதத்தானையும் கோயிலில் உதித்த பிற தெய்வங்களையும் வைக்கும் மரபு உள்ளது. சாஸ்தா தனி வழிபாடாகவும் குடும்ப வழிபாடாகவும் திகழ்கிறது. வள்ளியூர் வழி வரும் சாலை கிழக்கு பக்கம் முடிவதால் பக்தர்கள் வடக்குவாசல் வழியாக கோயிலுக்கு வருகின்றனர்.

Advertising
Advertising

கோயிலின் தென்மேற்கு கன்னிமூலையில் தளவாய் மாடசாமி கோயிலும் வடக்கு பிரகாரத்தில் மருதாணி மரத்தின்கீழ் பேச்சியம்மன் கோயிலும் உள்ளது. தளவாய் கோயிலுக்கு மருதாணி மரமே கூரையாக உள்ளது. பெரிய கோயில் வெளியே நம்பியாற்றின் கரையை ஒட்டி வடக்கு பக்கம் வன்னின் கோவிலும், வடக்கிழக்கு மூலையில் வீரமணி சாம்பானின் கோயிலும் உள்ளது. கோயிலின் முன்னே திறந்தவெளி ஓட்டுகூரை மண்டபம் உள்ளது. இக்கோயில் (கொல்லம் 1060ல்) கிபி 1885 மகாராஜா சாம்பான் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. நம்பியாற்றின் வடக்கே, பெரிய கோயிலின் எதிரே 1 கி.மீட்டர் தொலைவில் வடக்குவாய் செல்வி அம்மன் கோயில் உள்ளது.

பெரிய கோயிலுக்கும் வடக்குவாச்செல்வி கோயிலுக்கும் இடையே தேரோடும் வீதியும் தேரும் வன்னிகுத்து சடங்கு மேடையும் உள்ளது. இக்கோயிலுக்கு கேரளத்து மக்கள் வருவதையும் சேர்த்து பார்க்கலாம். கோயிலின் கருவறையில் சுவாமி சரிந்த நிலையில் உள்ளார். மூலவர் கையில் வேல் இருப்பதற்கு காரணம் கூறப்படுகிறது. திருச்செந்தூர் கோயிலில் கொடிமரம் நடுவதற்காக மகேந்திரகிரி மலையில் மரம் வெட்டி நம்பியாற்றில் போட்டுள்ளனர். மரம் தண்ணீரில் மிதந்து வராததற்கு தடை குறித்து பார்த்த போது சித்தூர் சாஸ்தாவை கண்டுள்ளனர்.

உடனே சாஸ்தா கையில் வேல் கொடுத்தனர். இதன்பிறகு வேல் சாஸ்தாவுக்குரிய ஆயுதமாக உள்ளது. இங்கு பங்குனி, ஆனி மாதங்களில் வருகிற உத்திர நட்சத்திரத்திலும் ஒவ்வொருமாத இறுதி சனிக்கிழமைகளிலும் திருக்கார்த்திகை சிவராத்திரி ஆகிய சிறப்பு விழாக்களிலும் பூஜைகள் நடைபெறும்.  உற்சவ மூர்த்திக்குரிய பூஜையும் ஆகம விதிப்படியே நடக்கிறது. மூலவரான சாஸ்தாவிற்கு 3 வேளை பூஜைகள் நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழா 6ம் நாளன்று தளவாய்சாமிக்கு சிறப்புபூஜை நடக்கிறது. இதில் முழு பலாப்பழம் தொலிக்காத தேங்காய் கருக்குலை என அப்படியே முழுதாக படைக்க வேண்டும்.

Related Stories: