மகா சிவராத்திரி திருவிழா கோலாகலம் : மீனாட்சி அம்மன் கோயிலில் விடிய விடிய சுவாமி தரிசனம்

மதுரை: மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரவு முழுவதும் பக்தர்களின் வசதிக்காக நடை திறக்கப்பட்டு இருந்தது. விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாதம்தோறும் திருவிழாக்கள் நடந்து வருகிறது. தை தெப்பத்திருவிழா முடிந்து, தற்போது மாசி திருவிழா நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து மகா சிவராத்திரி உற்சவம் நேற்று நடந்தது. நேற்று இரவு முழுக்க நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை இன்று அதிகாலை வரை நடைபெற்றது.

மீனாட்சி அம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேகப் பொருட்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி அருகே 1008 சங்காபிஷேகம் நடந்தது. லிங்க வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி அபிஷேகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் சேவார்த்திகள், பக்தர்கள் பால், தயிர், இளநீர், பன்னீர் பழவகைகள், தேன், மஞ்சள்பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை நேற்று மாலை வரை கோயிலில் உள்ள உள்துறை அலுவலகத்தில் கொடுத்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் கோயிலில் இரவு முழுவதும் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இணை கமிஷனர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: