சென்ட்ரல் இந்தியன் வங்கியின் வள்ளுவன்பேட்டை கிளையில் ஊழியராகப் பணிபுரிபவர், கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்). தீவிர மன உறுதி கொண்ட பெண்ணியவாதியான அவர், இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்வலர். மேலும், க.பாண்டி என்ற ஆணின் புனைப்பெயரில் கதை எழுதி வெளியிடும் ஒரு எழுத்தாளர். தனது தாத்தா எம்.எஸ்.பாஸ்கருடன் சேர்ந்து, வள்ளுவன்பேட்டை சபா என்ற இந்தி பிரசார சபாவை மூட போராட்டம் நடத்தி ஜெயிக்கிறார். இந்நிலையில், எம்.எஸ்.பாஸ்கருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு, தனது இறுதிக்காலத்திற்குள் பேத்தியின் திருமணத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
திருமணமே வேண்டாம் என்பதில் உடும்புப்பிடியாக இருந்த கீர்த்தி சுரேஷ், தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற மனம் மாறி, தனது வாசகராக இருந்த ரவீந்திர விஜய்யை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். இந்நிலையில், கல்கத்தாவிலுள்ள வங்கிக்கு பதவி உயர்வுடன் மாற்றலாகும் நோக்கத்தில், ரகசியமாக இந்தி தேர்வு எழுதும் கீர்த்தி சுரேஷின் செயல் அம்பலமாகிறது. அப்போது திடீரென்று தன் திருமணத்தை கீர்த்தி சுரேஷ் நிறுத்துகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இந்திக்கு எதிராக அல்ல; இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடும் முற்போக்குச் சிந்தனையுள்ள எழுத்தாளராக, தனது கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ‘மகாநடி’க்குப் பிறகு ஆழமான, அழுத்தமான நடிப்பை சுவாரஸ்யமாகவும், ஆளுமையுடனும் வெளிப்படுத்தி இருக்கிறார். பிற்போக்கு எண்ணங்கள் கொண்டவராக, கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யத் துடிப்பவராக ரவீந்திர விஜய் இயல்பாக நடித்துள்ளார். தாத்தாவாகவே வாழ்ந்துள்ள எம்.எஸ்.பாஸ்கர், தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்.
வங்கியில் கீர்த்தி சுரேஷின் தோழியாக இருக்கும் தேவதர்ஷினி காமெடியில் கலக்கியுள்ளார். ஜெயக்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன், இஸ்ரத் பானு, சூ கோய் செங், ராஜீவ் ரவீந்திரநாதன், ஆனந்த்சாமி ஆகியோரும் இயல்பான நடிப்பின் மூலம் கவனத்தை ஈர்க்கின்றனர். குறிப்பிட்ட காலக்கட்டத்தை திரையில் அழகாகப் பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் யாமினி யக்னமூர்த்திக்கு பாராட்டுகள்.
பீரியட் கதைக்கு ஏற்ப இசைக்கருவிகளைக் கையாண்டு பாடல்களையும், அழுத்தமான பின்னணி இசையையும் வழங்கியுள்ள ஷான் ரோல்டன், கதையின் ஓட்டத்துக்கு நன்கு கைகொடுத்துள்ளார். எழுதி இயக்கிய சுமன் குமார், ஆணாதிக்கத்தையும், அன்றைய அரசியலின் நிலைப்பாட்டையும் காமெடி கலந்து சாடியிருக்கிறார். மற்றபடி, பல காட்சிகளில் நாடகத்தனம் எட்டிப் பார்ப்பதை தவிர்த்திருக்கலாம்.
The post ரகு தாத்தா விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.