மங்காத வாழ்வருளும் மருதமலையான்

முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுவது மருதமலை. இம்மலையில் மருத மரங்கள் மிகுந்திருப்பதால் மருதமலை என்று பெயர் வந்தது. மலை முழுவதும் நோய் தீர்க்கும் அபூர்வ மூலிகை மரங்களும், செடிகளும் நிறைந்திருப்பதால் ‘மருந்து மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. இத்தல சுப்ரமணிய சுவாமியை மருத மலைக்குத் தலைவன் என்ற பொருளில் மருதமலையான், மருதப்பன், மருதாசல மூர்த்தி என்றழைக்கிறார்கள். மலையேறும்போது முதலில் தான்தோன்றி விநாயகரை வணங்கிய பின்பே மலையேற வேண்டும். மலையேற முடியாதவர்கள் வாகனங்களின் மூலமும் மலையை அடையலாம். மேலே மலைச்சாரலில் மூன்று கற்களை மாறுபட்ட நிறத்தில் காணலாம். இம்மூன்று கற்களும் கோயிலில் திருட வந்து முருகனால் சபிக்கப்பட்டு சிலையாகிப்போன திருடர்கள் என்பது செவி வழி செய்தி.

இடும்பன் கோயிலில் உருண்டை வடிவ பெரிய பாறையில் இடும்பன் உருவம் காவடி சுமந்த தோற்றத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. குழந்தை இல்லாத  தம்பதிகள் இங்குவந்து சிறு துணியில் தூளி(தொட்டில்) கட்டி இங்குள்ள பூசமரத்திலும், கோடாரிமுறி மரத்திலும் தொங்கவிட்டு இடும்பனை மனமுருகி வழிபட்டு செல்கிறார்கள். அவ்வாறு செய்யும் பக்தர்கள் இடும்பனின் கருணையால் மழலைவரம் பெறுகிறார்கள். இம்மலையில் ‘குதிரைக் குளம்புகளின் சுவடுகள் உள்ளது. அதற்கு அழகான மண்டபமும், அமைக்கப்பட்டுள்ளது. கோயில் நகைகளை திருடிச் சென்ற திருடர்களை, குதிரையில் முருகப் பெருமான் விரட்டி வந்தபோது பதிந்த குதிரையின் கால்தடங்கள்தான் அது என்கிறார்கள். மலையேறியதும் ஆதிமூலஸ்தானம் உள்ளது. இங்கு வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் மூவரும் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இங்கு பூஜை நடந்த பிறகுதான் கோயில் மூலவருக்கு பூஜை நடப்பது நடைமுறையில் உள்ளது.

மருத மலையான் சிரசில் கண்டிகை, பின்பக்கம் குடுமியுடன் கோவணம் அணிந்து வலக்கரத்தில் ஞானத்தண்டமேந்தி, இடக்கரத்தை இடையில் வைத்து, வேலோடு திருவருட்பாலிக்கிறார். இங்கு மருத தீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இதில் நீராடுவோருக்கு செல்வம் பெருகும் என திருத்துடிசைப் புராணம் கூறுகிறது. மலையில் பாம்பாட்டி சித்தரின் குகை உள்ளது. இறந்த பாம்பை ஆட்டுவித்ததால் பாம்பாட்டி சித்தரென அழைக்கப்படுகிறார். பாம்பாட்டி சித்தரின் குகைக்கும், ஆதி மூலஸ்தானத்திற்கும் இடையே சுரங்கப்பாதை உண்டு. இதன் வழியே சென்றுதான் பாம்பாட்டி சித்தர் முருகப்பெருமானை வழிபடுவாராம். முருகப் பெருமானுக்கு பூஜை முடிந்ததும் பாம்பாட்டி சித்தருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

இவருக்கு தினமும் விபூதி அலங்காரம் செய்கிறார்கள். இந்த விபூதியை பிரசாதமாகவும் தருகிறார்கள். நாகதோஷம் உள்ளவர்களும், விஷக் கடியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த விபூதியை நீரில் கரைத்துக் குடித்தும், சரும நோய் உள்ளவர்கள் இந்த விபூதியைப் பூசிக்கொண்டும் தத்தமது பிணி

நீங்கப்பெறுகிறார்கள். மருதமலை கோயிலிருந்து 2 கி.மீ. உயரத்தில் உச்சிப்பிள்ளையார் கோயில் கொண்டுள்ளார். கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கன் மரம், ஒட்டு மரம் ஆகிய ஐந்து மரங்கள் ஒன்றாக பின்னி ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் (மதிலுக்கு வெளியே) வளர்ந்திருக்கிறது. மரத்தடியில் அருட்பாலிக்கும் விநாயகர், வேல் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பில்லி, சூனிய தீவினைகள் தீரும், ஏழ்மை அகலும், தொழில் விருத்தியடையும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. பிரதான சந்நதிக்கு வலப்புறம் உட்பிராகாரத்தில் பட்டீஸ்வரர் சந்நதியும், இடப்புறம் மரகதாம்பிகை சந்நதியும் உள்ளன. முருகன் சந்நதி அம்பிகை, ஈசன் சந்நதிகளுக்கு இடையே அமைந்து சோமாஸ்கந்த அமைப்பில் உள்ளது விசேஷம்.

மருதமலையை முருகனின் உருவமாகவும், கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையை சிவனின் உருவமாகவும், நீலி மலையை பார்வதி அன்னையின் உருவமாகவும், இந்த மூன்று மலைகளும் சேர்ந்து சோமாஸ்கந்த மூர்த்தமாக அமைந்துள்ளதாகவும் பேரூர் புராணம் கூறுகிறது. மரகதாம்பிகை சந்நதிக்கு எதிரே நவகிரகங்களையும், பிரதான சந்நதிக்கு எதிரே இடப்புறமாக பெருமாளையும் தரிசிக்கலாம். மலைப் பாதைகளை ஒழுங்குபடுத்தி, இளைப்பாறும் மண்டபங்கள் கட்டி, மின்விளக்கு பொருத்தி, மருதமலை முருகன் பெருமைகளை திரைப்படங்கள் மூலம் உலகுக்கு உணர்த்தியவர் சாண்டோ எம்.எல்.ஏ. சின்னப்ப தேவர். அவர் மிகச் சிறந்த முருக பக்தர்.மருதமலையில் தைப்பூச, தேர்த்திருவிழா மிகப்பெரிய திருவிழா. மருதமலையானை ராஜ அலங்காரத்தில் தரிசிக்க கண்கோடி வேண்டும். கோவைக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மருதமலை. இம்மலை மேற்குத்தொடர்ச்சி மலையின் பின்னணி மயில் தோகை விரித்தது போலவும், மலை மீது அமர்ந்த முருகன் மயில் மீது அமர்ந்தது போலவும் காட்சி தருவது அற்புதம்.

லட்சுமி

Related Stories: