×

‘பேட் பாய்ஸ் : ரைட் ஆர் டை – திரைவிமர்சனம்

பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமாக வெளியாகியிருக்கிறது, ‘பேட் பாய்ஸ் : ரைட் ஆர் டை’ படம். உலக அளவில் புகழ்பெற்ற இந்த படத்தின் பாகங்களுக்கு எப்போதும் தனி அந்தஸ்த்து உண்டு.
1995ம் ஆண்டு வெளியானது முதல் பாகம். அன்றிலிருந்து இன்று வரை இப்படத்தின் பாகங்களுக்கு ஆக்ஷன், அதிரடி காட்சிகள், ஸ்டைலிஷ் என எப்போதும் தனி மவுசு உண்டு. இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தார், 3 மற்றும் இந்த 4வது பாகத்தை அடில் மற்றும் பிலால் இருவரும் இயக்கியுள்ளனர். சோனி தயாரிப்பில் வில் ஸ்மித், மார்டின் லாரன்ஸ், வனேசா ஹட்ஜென்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே படம் வெளியாகியிருக்கிறது.

மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) இருவரும் பார்ட்னர் துப்பறிவாளார்கள். முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக மியாமி காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர். அதில் மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என அவர் இறந்த பின்பும் அவர் மேல் வீண் பழி விழுகிறது. கான்ராட் நேர்மையான அதிகாரி என இருவரும் நிரூபித்தார்களா இல்லையா? அதன் முயற்சியில் என்னென்ன பிரச்னைகள் வருகின்றன என்பது மீதிக் கதை. வில் ஸ்மித் எனக்கு வயதாகி விட்டது என அவரே சொன்னாலும் நம்ப முடியாத அதே கம்பீரம், மிடுக்கு, ஸ்டைல் என 1995 நினைவலைகளை மீண்டும் தட்டுகிறார். ஆக்ஷன் எனில் வில் ஸ்மித்தின் வில் பவர் இரட்டிப்பு எனர்ஜி பெற்றுவிடும் போல அவ்வளவு கச்சிதமாக திரைக்கதையை தாங்குகிறார்.

அவருக்குப் பக்க பலமாக மார்டின் காமெடி, அதிரடி, அப்பாவித்தனம் என இன்னொரு மசாலா கேரக்டர். இருவரும் திரையில் காட்டும் ஆக்ஷன் மாயாஜாலம் ரகம். முந்தைய பாகம் மட்டுமின்றி 2003ம் ஆண்டு கதையுடனும் படம் தொடர்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர்கள் அடில் மற்றும் பிலால் வந்தபிறகு காமெடியும் அதிகரித்து இந்தப் பாகங்கள் மேலும் பொழுதுபோக்காக மாற்றமடைந்துள்ளன. ரேப்ரெச்ட் ஹெய்வெர்ட் ஒளிப்பதிவில் அட்லாண்டா, புளோரிடா, மியாமி என கண்களுக்கு விருந்தாக இடங்களும், ஆக்ஷன் காட்சிகளும் நம்மைக் கட்டிப் போடுகின்றன. லோர்னே பால்பே இசை படத்துக்கு இன்னொரு பலம். ஆனால் ஆக்ஷன் காட்சிகள் முன்பை விட குறைவாக தென்படுகின்றனவா அல்லது ‘ஜான் விக்‘, ‘ ‘ஃபாஸ்ட் & பியூரியஸ்‘ போன்ற பல படங்கள் வருகை இந்த ஆக்ஷனை சாதாரணமாக நம் கண்களுக்கு மாற்றிவிட்டனவா என்பதுதான் புரியவில்லை. ஆக்ஷன் காட்சிகள், ஸ்டண்ட் சற்று குறைவாக இருந்தன. மொத்தத்தில் ஆக்ஷன் அதிரடி ரசிகர்கள் மற்றும் பேட் பாய்ஸ் பாகங்களின் வெறியர்கள் தவற விடாக் கூடாத படம் இந்த ‘’பேட் பாய்ஸ் : ரைட் ஆர் டை‘.

The post ‘பேட் பாய்ஸ் : ரைட் ஆர் டை – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு? செல்போனை உடைக்க பார்த்த அமிதாப் பச்சன்