சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடம் நன்னீராட்டு விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறந்த இடத்தில் திருமடம் கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றது.  இதை தொடர்ந்து திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் திருவிளக்கு வழிபாடும், முதல்கால வேள்வியும் நடைபெற்றது. வேள்வி நிறைவுக்கு பிறகு நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் திருமுறை விண்ணப்பம் செய்து விமானம் மற்றும் மூலமூர்த்திகளான சுந்தரர், வினாயகர், சடையநாயனார், இசைஞானியார், நரசிங்க முனையரையர் ஆகிய சிலைகளுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருநாவலூர் கிராம பொதுமக்கள் மற்றும் தம்பிரான் தோழர் அறக்கட்டளை மற்றும் பவானி சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்து இருந்தனர். முன்னதாக இந்த மடம் நன்னீராட்டு விழா, அமாவாசை தினத்தில் நடைபெறுவதாகவும், இவ்வாறு நடைபெற்றால் தமிழக ஆட்சிக்கு ஆபத்து எனவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சிவாச்சாரியார்கள் மற்றும் அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories: