சென்னை: அதிமுக பொதுக்குழு வருகிற 23ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதையொட்டி, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் தொடர்பாக 12 பேர் கொண்ட குழுவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைத்துள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொன்னையன், வைகைச்செல்வன், செம்மலை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் சாதனைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கும். சசிகலா கட்சியில் இல்லை. அவர் குறித்து பேச வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது. நபிகள் நாயகம் குறித்து பாஜ செய்தி தொடர்பாளர் பேசியது தொடர்பாக அதிமுக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே என்று கேட்கிறீர்கள். இதுகுறித்த கருத்தை இபிஎஸ், ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்கள். பொதுவாகவே மதங்கள் மதிக்கப்பட வேண்டும். எந்த மதமாக இருந்தாலும் அது மதிக்கப்பட வேண்டும். மதத்திற்குள் மூக்கை நுழைக்கக்கூடாது. யாராக இருந்தாலும் மதத்தில் மூக்கை நுழைத்து மலிவான அரசியல் செய்வது என்பது மனிதகுலம் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். இதுபோன்ற பிற்போக்குதனமான கருத்துகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.அதிமுக கட்சி, அதிக அளவு போராட்டம் நடத்தவில்லை என்ற மாயை பிரசாரம் நடத்தப்படுகிறது. ஆனால் எங்களுக்கு என்று ஒரு கடமை உள்ளது. மக்கள் விரோத போக்கு, ஜனநாயக விரோத போக்கு, இந்த ஆட்சியின் அவலநிலை குறித்து மக்களிடையே தோலுரித்துக் காட்டுவதற்கு ஒரே ஆயுதம் எது என்றால் அது போராட்டம்தான். இதில் நாங்கள் ஆர்ப்பாட்டத்திற்கும், போராட்டத்திற்கும் என்றும் பின்வாங்கியதில்லை. பாஜ கட்சியை அவர்கள் வளர்த்துக் கொள்ளட்டும். அதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் எங்களுடைய கடமையில் இருந்து நாங்கள் என்றும் தவறுவது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்….
The post நபிகள் நாயகம் குறித்து பாஜ செய்தி தொடர்பாளர் பேசிய விவகாரம் மத விவகாரங்களில் தலையிட்டு மலிவான அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.