நைஜீரிய ஆசாமியை பிடிக்க நடவடிக்கை போதை பொருள் கும்பலுடன் தொடர்புடையவர்கள் யார், யார்?: புதுவை போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் பிடிபட்ட போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் போதை பொருட்களை இக்கும்பலுக்கு சப்ளை செய்த நைஜீரிய ஆசாமியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுச்சேரியில் போதை பொருள் விற்பனையை தடுக்க எஸ்பி வம்சித ரெட்டி தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இவரது உத்தரவின்பேரில் சிறப்பு அதிரடிப்படையினர் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டு சந்தேக இடங்களில் “ஆபரேஷன் விடியல்” என்னும் சோதனையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குருசுகுப்பம் கடற்கரையை ஒட்டியுள்ள மரவாடி தெருவில் போதை பொருள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.சிறப்பு அதிரடிப்படையினர் முத்தியால்பேட்டை காவல்துறையுடன் இணைந்து அங்கு விசாரணை மேற்கொண்டு சந்தேகத்துக்கிடமாக இருந்த ஆப்பிரிக்கவை சேர்ந்த இளம்பெண் உள்பட 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மெத்திலி என்ற போதை மாத்திரைகளையும், கோக்கென் என்ற போதை பவுடர்களையும் பதுக்கி விற்றதும் தெரியவந்தது. பிடிபட்டவர்கள் ஜஸ்டின் டெல்வின் தாரிமோ (29), டேபிட் மைக்கேல் எலியா (26), பிரான்சிஸ் லக்கி ஓட்ரி (22) என்பதும் தெரியவந்தது. இதில் ஜஸ்டின் டெல்வின் சுற்றுலா விசாவில் பெரியமுதலியார்சாவடியிலும், டேவிட் மைக்கேல் சிதம்பரத்தில் ஒரு கல்லூரியிலும், பிரான்சிஸ் லக்கி சேலத்தில் ஒரு கல்லூரியிலும் பயின்று வருவது வெளிச்சத்திற்கு வந்தது. ரூ.3 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரை, பவுடர்களை கைப்பற்றி சிறையில் அடைத்தனர். முன்னதாக போதை பொருள் விற்பனை கடத்தல் தொடர்பாக அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் டெல்லியில் தங்கியிருக்கும் நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் போதை பொருட்களை சப்ளை செய்தது அம்பலமானது. இருப்பினும் இக்கும்பல், புதுச்சேரியில் போதை பொருட்களை விற்க ஏஜெண்டாக செயல்பட்டவர்கள் யார், யார்?, எந்தெந்த இடங்களில் இவை விற்பனை செய்யப்பட்டன என்பது தொடர்பான விசாரணையில் சிறப்பு அதிரடி படையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இதற்காக பிடிபட்ட 3 பேரும் தங்கியுள்ள பெரியமுதலியார்சாவடி, சிதம்பரம், சேலத்தில் சோதனை நடத்தி ஆரோவில்லில் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் விபரங்களையும் சேகரித்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் அங்கு தங்கியுள்ள ஆப்பிரிக்க நாட்டு இளைஞர், இளம்பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக பிடிபட்ட 3 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை கொண்டு முழு விபரங்களை போலீசார் திரட்டி வருகிறது. இதனால் இவ்வழக்கில் அடுத்தடுத்து மேலும் சிலர் சிக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post நைஜீரிய ஆசாமியை பிடிக்க நடவடிக்கை போதை பொருள் கும்பலுடன் தொடர்புடையவர்கள் யார், யார்?: புதுவை போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: