நாடு முழுவதும் திடீரென ரூ.50 அதிகரிப்பு சமையல் காஸ் விலை ரூ.1000த்தை தாண்டியது: மக்கள் தலையில் மீண்டும் பேரிடி

சேலம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. இந்தவகையில், கடந்த 2020 ஜூன் மாதத்தில் இருந்து காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. அதிலும், கடந்தாண்டு (2021) பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3 முறையாக ரூ.100 அதிகரித்தனர். 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி திடீரென அதிரடியாக காஸ் விலையை ரூ.50 அதிகரித்தனர். இதனால், சென்னையில் ரூ.965.50, டெல்லியில் ரூ.949.50, கொல்கத்தாவில் ரூ.976, மும்பையில் ரூ.949.50 என உயர்ந்தது. இந்த விலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இம் மாதம் (மே) 1ம் தேதி வீட்டு உபயோக காஸ் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 19 கிலோ வர்த்தக காஸ் விலையை மட்டும் ரூ.102.50 அதிகரித்தனர். அதனால், அதன் விலை சென்னையில் ரூ.2,508 ஆக அதிகரித்தது.இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ.50 அதிகரித்து அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் சமையல் காஸ் விலை ரூ.1000ஐ தாண்டியது. சென்னையில் ரூ.1,015.50, டெல்லியில் ரூ.999.50, கொல்கத்தாவில் ரூ.1,026, மும்பையில் ரூ.999.50, சேலத்தில் ரூ.1,033.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதம் 1ம் தேதி விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், தற்போது திடீரென 7ம் தேதி ரூ.50 அதிகரிக்கப்பட்டதால், மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலையில் ரூ.9 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ரூ.2,508ல் இருந்து ரூ.9 குறைந்து ரூ.2,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லியில் ரூ.2,346 ஆகவும், மும்பையில் ரூ.2,297.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2,445.50 ஆகவும், சேலத்தில் ரூ.2,452 ஆகவும் உள்ளது. வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டருக்கான ஒன்றிய அரசின் மானியமும் 90 சதவீத பேருக்கு நிறுத்தப்பட்டு விட்டது. மானியம் பெறும் சுமார் 10 சதவீத பேருக்கும் ரூ.36 என்ற நிலையில் தான் கிடைக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள், முழு தொகையாக ரூ.1000க்கு மேல் செலுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை ரூ.110 என்ற நிலைக்கு உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களின் விலையும் ஒருபுறம் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் சமையல் காஸ் விலையும் ரூ.1000ஐ தாண்டி விட்டதால், குடும்பத்தலைவிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். * 2 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்வுவீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை கடந்த 2020 மே மாதம் சென்னையில் ரூ.569.50 ஆக இருந்தது. இதுவே 2 ஆண்டிற்கு பிறகு  இந்தாண்டு மே மாதத்தில், அதாவது நேற்றைய தினம் ரூ.1,015.50 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி 2 ஆண்டில் மட்டும் கிட்டதட்ட இருமடங்கு விலை உயர்ந்துள்ளது. ஓராண்டை கணக்கிடும் பட்சத்தில், கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் காஸ் விலை ரூ.825 ஆக இருந்தது. இதில் இருந்து பார்க்கும்போது ரூ.190.50 அதிகரித்திருக்கிறது. அதாவது, ஜூலை மாதத்தில் ரூ.25ம், ஆகஸ்ட்டில் ரூ.25ம், செப்டம்பரில் ரூ.25ம், அக்டோபரில் ரூ.15ம், மார்ச் மாதத்தில் ரூ.50ம், தற்போது மே மாதத்தில் ரூ.50ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படியே சென்றால், வரும் ஆண்டுகளில் காஸ் அடுப்பில் சமையல் செய்ய முடியாத நிலைக்கு ஏழை, எளிய மக்கள் தள்ளப்படுவார்கள். மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. * பெட்ரோல், டீசல் விலை ஒரு மாதமாக மாற்றமில்லைநாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது. இதனால், பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.110ஐயும், டீசல் விலை ரூ.102ஐயும் எட்டியது. இதில் கடைசியாக ஏப்ரல் 6ம் தேதி பெட்ரோல் 75 காசும், டீசல் 76 காசும் உயர்த்தப்பட்டது. இதன்பின், கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.110.85க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.100.94க்கும் விற்கப்பட்டது. சேலத்தில், பெட்ரோல் ரூ.111.17க்கும், டீசல் ரூ.101.28க்கும் விற்பனையானது….

The post நாடு முழுவதும் திடீரென ரூ.50 அதிகரிப்பு சமையல் காஸ் விலை ரூ.1000த்தை தாண்டியது: மக்கள் தலையில் மீண்டும் பேரிடி appeared first on Dinakaran.

Related Stories: