ஒரே நாளில் மூன்று அம்பிகையர் தரிசனம்

திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் தொண்டைமான் கட்டிய திருக்கோயில். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இத்தலம் முல்லைவனம் என்னும் பெயருடையது. இத்தலம், கிருதயுகத்தில் ரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும், துவாபரயுகத்தில் ஷண்பக வனமாகவும், விளங்கி கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்கிறது. தொண்டைமான் சக்ரவர்த்தி காஞ்சியை மையமாகக் கொண்டு ஆண்டு வந்தான் அவன் திக்விஜயம் மேற் கொண்டான். புழல்கோட்டையிலிருந்து கொண்டு, ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள், எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர் (இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு) பேறு பெற்றவர்கள். அத்திருக்கோயிலே ஓணகாந்தன்தளி ஆகும்) இவர்களைக்காணத் தொண்டைமான் சக்ரவர்த்தி வந்தான். வரும் வழியில் ‘கோழம்பேடு’ என்னும் கிராமத்தில் தங்கி இரவு உறங்கும்போது வெங்கல மணியோசை கேட்டது.

அங்குச் சிவத்தலம் இருக்க வேண்டும் என்றறிந்து, மன்னன் மறுநாள் காலை யானைமீதேறிவந்தான். அவன் வருவதைக்கண்ட அசுரர்களின் குறு நில மன்னன் ஒருவன் தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்க்கலானான். தனியே வந்த தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளைக்கொண்டு வரத்திரும்பினான். அவ்வாறு திரும்பியதும் முல்லைப்புதர் வழியாக வரும்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக் கொள்ள, மன்னன் யானைமீதீருந்தவாறே தன் உடைவாளால் வெட்ட, ரத்தம் வெளிப்பட்டது. திகைத்த மன்னன் கீழிறங்கிப்பார்க்க அங்குச் சிவலிங்கத் திருமேனி இருப்பதைக்கண்டான். தன் பிழைக்கு வருந்தி, அவ்வாளால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றான், அப்போது இறைவன் காட்சி தந்து, “மன்னனே வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை. நான் மாசு இல்லா மணியே வருந்தற்க, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன்.

வெற்றிபெற்று வருவாயாக” என்று அருள் புரிந்தார். (இதனால்தான் இத்தலத்தில் நந்தி கிழக்கு நோக்கியுள்ளது) . தொண்டைமான் (நந்தியெம்பெருமானுடன்) வருவதையறிந்து, ஓணன், காந்தன் இரு அசுரர்களும் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சந்நதியின் முன்னால் உள்ளன. வெங்கலக்கதவும், பவழத்தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப்பட்டதாகவும் அவை காலப்போக்கில் வெள்ளத்தின் வாய்ப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.” இறைவன்  நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர் எனும் திருப்பெயர்களில் அருளாசி வழங்குறார். இறைவி  லதாமத்யாம்பாள், கொடையிடைநாயகி, கொடியிடையம்மை எனும் திருப்பெயர்களில் பொலிகிறாள். தலமரமான  முல்லை வெளிச்சுற்றில் நந்தியின் பக்கத்தில் உள்ளது. தீர்த்தமாக கல்யாண தீர்த்தம் உள்ள திருத்தலம் இது. சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம் இது. இத்தல நந்தி கிழக்கு நோக்கியுள்ளது.

ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் தெற்கு நோக்கியது. பக்கத்தில் தீர்த்தக்குளம் உள்ளது. ராஜகோபுரத்திற்கு எதிரில் சந்நதி வீதியில் பதினாறுகால் மண்டபமும் பக்கத்தில் வசந்த மண்டபமும் உள்ளன. ராஜகோபுரத்தில் துவார பாலகர்கள் உள்ளனர். நுழையும்போது எதிரில் பிரசன்ன விநாயகரை தரிசிக்கலாம். அவருக்குப் பின்னால் மதில்மீது தல வரலாற்றுச் சிற்பங்களான  யானைமீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம்  தன் கழுத்தை அரிவது  காட்சி தருவது  சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. வலமாக வரும்போது கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள் அம்பாள் சந்நதியும், சோமாஸ்கந்தர் சந்நதியும், சுப்பிரமணியர் சந்நதியும் உள்ளன. விசாலமான வெளிப்பிராகாரத்தில் வில்வமரமும் பைரவர் சந்நதியும் உளளது. செப்புக் கவசமிட்ட கொடி மரம். நந்தி (தொண்டைமானுக்கு உதவும் நிலையில்) கிழக்கு நோக்கி உள்ளது. உள் நுழைந்தால் இடப்புறம் சூரியனின் திருவுருவம் அமைந்துள்ளது.

மூலவர் சந்நதி கிழக்கு நோக்கி உள்ளது, அற்புதமான சுயம்பு மூர்த்தி, உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார், மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. இத்திருமேனியில் எப்போதும் சந்தனம் சாத்தப்பட்டிருக்கும், ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான், வருடத்திற்கொருமுறை  சித்திரை மாத சதயத்தில் சந்தனக் காப்பு களையப்பட்டு மீண்டும் சாத்தப்படுகின்றது. அது அடுத்த சித்திரை சதயம் வரை அப்படியே சுவாமி மீதிருக்கும். சுவாமிக்கு, வெந்நீர் அபிஷேகம். அபிஷேகக் காலங்களில் மேன்மேலும் சந்தனம் சாத்தப்படும். ஆனால் களைவதில்லை, களைந்து சாத்துவது மேற்குறித்த ஒருநாளில் மட்டுமே. இதனால் சுவாமிமீது எப்போதும் சந்தனக்காப்பு இருந்து கொண்டேயிருக்கும். மூலவர் முன்னால் இரு எருக்கந்தூண்கள் உள்ளன. பூண்கள் இடப்பட்டுள்ளன. சுவாமியின் கருவறை விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது.

சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாச்சாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் (பிற்காலப் பிரதிஷ்டையான) ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது. உட்சுற்றில் வீரபத்திரர், நால்வர், விநாயகர், நாகலிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நதிகள் உள்ளன. பைரவரும் அருணகிரியும் அருட்காட்சி தருகின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக, க்ஷிப்ர கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவரிடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நதி உள்ளது. நடராஜ சபைக்குப் பக்கத்தில், தொண்டைமானுக்குக் காட்சி தந்த ரிஷப நாயகர் உள்ளார். தொண்டைமானுக்கு அவசரத்தில் காட்சி தந்ததால் அம்பாள் சந்நதி வலப்புறமாக உள்ளதாம். கிழக்கு நோக்கியது.

அம்பாள் சந்நதியை வலம் வரலாம். பள்ளியறை உள்ளது. அம்பாள் வரப்ரசாதியாக எழிலோடும் பொலிவோடும் திருவருட்பாலிக்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் சந்நதி இது. முகப்பில் துவார பாலகியரும் உள்ளனர். வைகாசி விசாகத்தில் பத்து நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. இத்தலத்தில்தான் சிறப்புமிக்க வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய ‘பச்சையம்மன் கோயிலும்’ உள்ளன. இக்கோயில் தொடர்பாகச் சொல்லப்படும் செவிவழிச் செய்தியன்று வருமாறு

(1) சென்னை பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை.

(2) சென்னை  திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை.

(3) இத்தலத்துக் கொடியிடை அம்மை  ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டவை என்றும், வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும் மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகின்றது. இன்றும் பலர் இவ்வழக்கத்தைக் கைக்கொண்டு தரிசித்து வருகின்றனர். ராமலிங்க வள்ளலாரின் திருவருட்பாவிலும், அருணகிரிநாதரின் திருப்புகழிலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. சுந்தரர், இத்தலத்துப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் “அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே” என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பாடுந்திறம் நெஞ்சை நெகிழ வைக்கவல்லன. அற்புதமான நெஞ்சுருக்கும் பதிகம். சோழநாட்டில்  தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லை வாயில் உள்ளதால் இது வடதிருமுல்லைவாயில் எனப்படுகிறது. சென்னை  ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது.

திருவொற்றியூர்  வடிவுடையம்மன்

ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். சுந்தரர், சங்கிலியாரை மணந்துகொண்ட சிறப்புடையது. கலியநாயனாரின் அவதாரத் தலம். தியாகேசப்பெருமான் வீற்றிருந்தருளும் தெய்விகச் சிறப்பு வாய்ந்த தலம். ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன் முதலியோர் வழிபட்டது. முற்றத்துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்ற தலம். வடலூர் வள்ளற்பெருமானின் வாழ்வோடு இயைந்த பதி. மிகப்பெரிய கோயில். கோயிலின்முன் பதினாறுகால் மண்டபம் உள்ளது. பக்கத்தில் பெரிய தீர்த்தக்குளம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. பழமையான கோபுரம் உள்ளே நுழைந்தால் செப்புக்கவசமிட்ட கொடி மரம், பலிபீடம், நந்தி உள்ளன.

வலமாக வரும் போது சூரியன் சந்நதி, அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் சங்கிலியாருடன், உயரமான ஸஹஸ்ரலிங்கம், ஏகாம்பரர், ராமநாதர், ஜகந்நாதர், அமிர்தகண்டீஸ்வரர், யாகசாலை, குழந்தை ஈஸ்வரர், சுப்பிரமணியர், மதிற்சுவரை ஒட்டினாற்போல, இருபத்தேழு நட்சத்திரங்களும் இப்பெருமானை வழிபட்ட ஐதீகத்தை விளக்கும் வகையில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள நட்சத்திர சிவலிங்கங்கள் முதலிய சந்நதிகள் உள்ளன. பக்கத்தில் காளி சந்நதியும் உள்ளது.

இதற்கு வலப்புறம் கௌரீஸ்வரர் சந்நதி உள்ளது. இச் சந்நதியில் தட்சிணாமூர்த்தி, யோகமுத்திரையுடன் காட்சி தருகின்றார். பக்கத்தில் ஆதிசங்கரர், உருவம் உள்ளது. அடுத்து வேப்பமர நிழலில் பெரிய லிங்கம் ஆவுடையாரின்றி உள்ளது. அடுத்து ஆகாசலிங்கம், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்தீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் முதலிய சந்நதிகள் (சிவலிங்கத் திருமேனிகளுடன்) உள்ளன.

அதையடுத்து ‘ஓற்றியூர் ஈஸ்வரர்’ கோயில் அழகான முன் மண்டபத்துடன் உள்ளது. இப்பெருமானுக்குத்தான் நான்கு கால பூஜைகளும் நடைபெறுகின்றன. இம்முன்மண்டபத் தூண்கள் அற்புதமான சிற்பங்களையுடையவை. ஒரு தூணில் பட்டினத்து அடிகளும் அதற்கு எதிர்த்தூணில் பர்த்ருஹரியாரும் உள்ளனர். இவற்றிற்கு இடையில் மேலேயுள்ள தூணில்  விதானத்தில் சூரியன் தலைப்புறமும் சந்திரன் காற்புறமும் அமைய மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் பஞ்சாட்சர விளக்கம் அமைத்துக் காட்டப்பட்டுள்ள (கல்சிற்பம்) அழகு கண்டுணரத் தக்கது. அழகான துவார பாலகர்கள். இச்சந்நதி ஸ்ரீ ஆதிசங்கரரின் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது. பைரவர் தனிக்கோயிலில் உள்ளார்.

நடராஜப் பெருமானின் பின்புறத்தில் சுவரில் வெளிப் பிராகாரத்தில் ஏகபாத மூர்த்தியின் உருவம் அழகாக உள்ளது. அடுத்து சுந்தரமூர்த்தியார் மண்டபம் உள்ளது. இதில் சுந்தரர், சங்கிலியாருடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தருகின்றார். இம் மண்டபத்தில் மக்கள் இன்றும் வந்து திருமணங்களை நடத்திச்

செல்கின்றனர். வலம் முடிந்து நேரே சென்று தியாகராஜ சபா மண்டபம் அடையலாம். தியாகராஜர் சந்நதி இங்கு விசேஷமானது. தரிசித்து பின்பு நுழைவு வாயிலில் சென்றால் நேரே எதிரில் நடராஜர் காட்சி தருகின்றார். இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரின் உற்சவத் திருமேனியின் சந்நதி உள்ளது. அழகான முன்மண்டபம் கல்லால் ஆனது. அதன் வலப்புறம் குணாலய விநாயகர் சந்நதி. நேரே மூலவர் சந்நதி. எதிரில் நந்தி, பலிபீடம். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது.

இறைவன் ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர்,  ஆனந்தத்தியாகர் எனும்  திருப்பெயர்களில் அருள இறைவி  திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம். எனும் பெயர்கள் கொண்டு திகழ்கிறாள்.  தலமரமாக மகிழ மரமும், தீர்த்தமாக  பிரம தீர்த்தமும் உள்ளது.  மூவராலும் பாடல் பெற்ற தலம். மூலவர் சுயம்பு. நாக வடிவில் அமைந்துள்ள சிவலிங்கத் திருமேனி, சிவலிங்கமும், ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன. சதுரவடிவமான கவசம் சுவாமிக்குச் சாத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் இக்கவசம் அகற்றப்பட்டு புனுகுசட்டம், ஜவ்வாது, சாம்பிராணித் தைலம் ஆகியவை மட்டுமே சுவாமி, கவசமில்லாதிருப்பார். மீண்டும் சாத்தப்பட்டு ஆண்டு முழுவதும் சுவாமி கவசத்துடனேயே காட்சியளிக்கின்றார்.

பிறஅபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. விசாலமான உள்ளிடம் கொண்ட கருவறை, ஒற்றியூருடைய கோ”வின் தரிசனம் உள்ளத்திற்கு நிறைவைத் தருகிறது. மூலவர் பிராகாரத்தில் கலிய நாயனார், அறுபத்துமூவர், தலவிநாயகர் சந்நதிகள் உள்ளன. அடுத்து ஆதிசங்கரர் சந்நதி உள்ளது. பீடத்தில் நான்கு சிஷ்யர்களின் உருவங்கள் உள்ளன. அடுத்து ஏகாதச ருத்ரலிங்கம் உள்ளது. பக்கத்தில் முருகன் சந்நதி, அடுத்துள்ளது, மிக்க புகழ்பெற்ற ‘வட்டப்பாறை அம்மன்’ (காளி) சந்நதி, இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுதியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.

அடுத்து “திருப்தீஸ்வரர்” சந்நதி உள்ளது. இங்குக் கல்லில் சிவலிங்க வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. சந்திரசேகரர் சந்நதி அடுத்து உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், மகாவிஷ்ணுவும், பிரம்மனும், துர்க்கையும் உள்ளனர். வள்ளற்பெருமானின் பாடல்களும், திருமுறைப் பதிகங்களும் கோயிற்சுவரில் கல்லில் பொறித்துப் பதிக்கப் பெற்றுள்ளன. அம்பாள் சந்நதி. கோபுர வாயிலில் நுழைந்தவுடன் வலப்பால் உள்ளது. தனிக்கோயில்  தெற்கு நோக்கியது. அம்பாளுக்கு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டையாகும். இந்த அம்பாள் மீது வடலூர் வள்ளற் பெருமான் பாடியதே ‘வடிவுடை மாணிக்கமாலை’யாகும். இப்பாடல்கள் சலவைக்கல்லிற் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.

பிராகாரத்தில் பல்வேறு அம்பிகைகளின் வண்ணப் படங்கள் மாட்டப்பட்டுள்ளன. கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. வள்ளலாருக்கு அவரின் அண்ணியின் வடிவில் நேரில் வந்து உணவூட்டியவள் இத்தேவி. ஒவ்வொரு வாரமும் அன்னையின் உற்சவ விக்ரகமான சுக்கிரவார அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றது.  பட்டினத்தார், காளமேகம், அருணகிரிநாதர், தியாகயர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் சுவாமி, அம்பாள்மீது பாடல்களை  கீர்த்தனைகளைப் பாடியுள்ளனர். சென்னையின் ஒருபகுதி. ‘உயர்நீதி மன்றப்’ பகுதியிலிருந்து திருவொற்றியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது, இப்பேருந்தில் ஏறி, காலடிப்பேட்டையை அடுத்து, ‘தேரடி நிறுத்தத்தில்’ (தேரடி நிறுத்தம்) இறங்கினால் எதிரில் வீதிகோடியில் கோயிலைக் காணலாம்.

மேலூர் திருவுடையம்மன். சிவாலயமாக இருந்தாலும், அங்கு அருளும் அம்பிகையின் பெயரிலேயே அந்த ஆலயம் புகழடைந்திருக்கும். அதாவது, அம்மனின் பெயரைச் சொல்லியே அக்கோயிலை குறிப்பிடுவார்கள். மதுரை மீனாட்சியும், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியும் உதாரணங்கள். இவ்வாறு இறைவியின் நாமத்தால் குறிப்பிடப்படும் ஆலயங்களுள் சென்னையை அடுத்துள்ள மேலூர் சிவன் கோயிலும் ஒன்று. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்பவளான பராசக்திதான் பலவித காரணங்களுக்காக பல்வேறு வடிவங்களோடு பல்வேறு தலங்களில் அருள்கிறாள். பராசக்தியிலிருந்து ஆதிசக்தியும், ஆதிசக்தியிலிருந்து இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்திகளும் தோன்றி உலகைப் படைத்து, இயக்கி இறுதியில் வீடு பேறு அருள்வதாக தேவிபாகவதம் கூறுகிறது.

இப்படி முப்பெரும் நிலைகளில் இயங்கி, அகில உலகையும் காத்தருளும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியின் அமர்விடமே 44 முக்கோணங்கள் நிறைந்த ஸ்ரீசக்ரம்தான்.இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளுக்குரிய ஒரே நாளில் தரிசிக்கும் திருத்தலங்களாக மேலூர், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில் ஆகியன திகழ்கின்றன. அவற்றுள் இச்சா சக்தியாக திருவுடையம்மன் அருள் வழங்கும் தலம், மேலூர். சென்னைமீஞ்சூர் சாலையில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேலூர். சாலையின் இடப்புறம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு திருமணங்கீசர் ஆலயம் என எழுதப்பட்ட அலங்கார வளைவு நம்மை வரவேற்கிறது. இவ்வளைவிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

அன்னை தன் மேலிருகரங்களில் பாசாங்குசத்தைக் கொண்டிருக்கிறாள். கீழிரு கரங்களில் அபய  வரத முத்திரையைக் காட்டி அருட்காட்சி தருகின்றாள். தேவியின் கண்களில் ஒளிரும் கருணை நம் மனதை குளிர்விக்கிறது. பெரிய ஆலயங்களில் அருளும் அம்பிகையின் அலங்கார அணிகளோ, ரத்னாபரணங்களின் ஜொலி ஜொலிப்போ இல்லையென்றாலும் தஞ்சமென நாடி வரும் அடியவரை எக்காலமும் காப்பேன் எனச் சொல்லாமல் சொல்கிறது, அன்னையின் ஆனந்த புன்னகை பூத்த திருமுகம். உலகத்தில் உள்ள சகல நன்மைகளையும் அருளும் இவளை மங்களநாயகி தாயே என பக்தர்கள் பாசத்தோடு அழைத்து தொழுகிறார்கள். அன்னையின் சந்நதியில் பக்தைகள்  லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம்.  இதனால் தங்களின் வாழ்வு வளம் பெறுவதாக சொல்கிறார்கள், பலனடைந்த பக்தர்கள். அம்பாளின் திருமுன் சிம்மமும், பலிபீடமும், கொடிமரமும் காணப்படுகின்றன.

அம்பாள் சந்நதிக்கும் கொடிமரத்துக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. நாயக்க மன்னராட்சிக் காலத்தில் மிளகுக்குச் சுங்கவரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இப்பகுதிக்கு ஒரு வணிகன் மிளகு மூட்டைகளுடன் வந்தான். வரி செலுத்த விரும்பாத அவன் தன் மூட்டைகளில் பயறு இருப்பதாக அதிகாரிகளிடம் பொய் சொன்னான். சந்தைக்குச் சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வணிகன், மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாறி இருந்ததைக் கண்டு பதறித் துடித்தான்.

பின் மனம் வருந்தி இச்சா சக்தியாக அருள்புரியும் திரிபுரசுந்தரியிடம் மன்னிப்பு கேட்டான். மனம் திருந்திய வணிகனுக்கு அருள்புரிந்திட திருவுளம் கொண்ட தேவி பயறு மூட்டைகளை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றினாள். அன்னையின் மகிமையை அனுபவ பூர்வமாய் உணர்ந்த அந்த வணிகன் சுங்க

வரியாக செலுத்த வேண்டிய பணத்தை ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினான். அம்பாள் சந்நதிக்கு முன் மண்டபத்தையும் கட்டிக் கொடுத்தான். அதுதான் மிளகுமாற்றியான் மண்டபம். திருமணங்கீசர், அம்பிகை ஆலயத்திற்கு மேற்கே தனிச்சந்நதியில் கிழக்கு நோக்கி அருள்கிறார். இவரை சுகந்தபுரீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். ஆதிகாலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் செல்வந்தர் ஒருவரின் பசு தினமும் காட்டில் மேய்ந்து விட்டு வீட்டிற்கு வந்து தன் கன்றுக்கு மட்டும் பால் கொடுத்துவிட்டு மீண்டும் காட்டிற்குச் சென்று விடுமாம்.

இதைக் கேள்விப்பட்ட அந்தச் செல்வந்தர் தானே அதன் காரணத்தைக் கண்டறிய பசுவைப் பின் தொடர்ந்தார். அங்கே அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது.

பசு செல்லும் திசையிலிருந்து நாகலிங்கப்பூவின் நறுமணம் வீசியது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அங்கிருந்த புற்றின் மேல் பசு பால் சொரிவது கண்டு வியந்தார். உடனே புற்றை இடித்துப் பார்த்தார். அதில் சிவலிங்கம் வெளிப்பட்டதைக் கண்ட அவர், ஆனந்தத்தோடு அந்த இடத்திலேயே அரனுக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டார். லிங்கம் இருந்த பகுதியைச் சுற்றி நாகலிங்கம் மற்றும் சரக்கொன்றை மரங்கள் இருந்தனவாம். மலர்களின் சுகந்தம் சூழ அமர்ந்திருந்த இப்பெருமானை, மக்கள் சுகந்தபுரீஸ்வரர் என அழைத்தனர். காலப்போக்கில் இறைவன் திருமணங்கீஸ்வரர் ஆனார். இப்போதும் மண்புற்றுதான் சிவலிங்கமாக உள்ளது. அதன்மேல் செப்புக் கவசம் சாத்தி அபிஷேக ஆராதனைகள் செய்து வருகின்றனர்.

உள் பிராகாரத்தில் சூரியன், பைரவர், வீரபத்திரர், விநாயகர், சுப்ரமண்யர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காளத்திநாதர், நால்வர், மகாலட்சுமி ஆகியோர் அருள்கிறார்கள். கருவறை கோஷ்ட தேவதைகளாக நின்ற கோலத்தில் கணபதி, தவக்கோல தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் தரிசனம் தருகின்றார்கள். சுவாமி சந்நதிக்கு முன்புறம் 24 தூண்கள் கொண்ட கருங்கல் மண்டபம் ஒன்று இருக்கிறது. தூண்களில் அதியற்புதமான சிற்பங்களை காணலாம். மண்டபத்தின் வடகோடியில் உற்சவ மூர்த்திகளை தரிசிக்கலாம். குறிப்பாக நடராஜ மூர்த்தி அழகு, பேரழகு! முதலில் செங்கல் கட்டிடமாக இருந்த ஆலயம் சோழர்காலத்தில் கற்றளியாக மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. இத்தலத்திற்கு வருகை தந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியத்தேவர் அப்போது கோயிலின் சீர்கேட்டைக் கண்டு மனம் வருந்தி உடனே திருப்பணிகளை மேற்கொண்டிருக்கிறான்.

பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் திரிபுரசுந்தரியைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் லதாமத்யம்பா எனும் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கிறது என பக்தர்கள் கூறுகின்றனர். இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதிபரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, ‘எனக்கொன்றும் வேண்டாம். வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு நல்லன தந்தருள வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாராம். அதன்படி இத்தலம் வருவோரின் குறைகளை சடுதியில் களைந்தருள்கிறார் இத்தல ஈசன். அன்னை திருவுடையம்மனோ, தன் பக்தர்களுக்கு  மழலை வரம், திருமண வரம் தருவதில் கருணையை மழையாய் பொழிந்தருள்கிறாள்.     

Related Stories: