பகுதி 2
ஆயர் குலப் பெண் தனது புடவையின் தலைப்பைச் சுற்றி சும்மாடு போல தலையில் வைத்துக் கொள்ள ஆக்கியதால் மாறிய உடை. ஆயர் குலப் பெண், பால், தயிர் பானைகளைச் சுமந்து செல்வதனால் வரக்கூடிய நடை. ஆயர் குலப் பெண் மேல், பால், தயிர் பட்டுப்பட்டு ஏற்பட்ட முடை வாசனை என விளக்கம் சொன்னார்கள். கோதை, என்றும் அவள் உலகத்தில் கண்ணனுடன் இருந்தாள் என்பதைவிட, கண்ணன் உலகத்தில் அவள் மட்டுமே இருப்பதாகவே வாழ்ந்தாள். அன்று ரோகிணி நட்சத்திரம் கூடிய திருநாள். பெரியாழ்வார், தான் தொடுத்த அந்தப் பெரிய மாலையை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தார். இத்தனை நாள், தான் தொடுத்த மாலைகளில் அன்றைய மாலை, அவருக்கு மிகவும் விசேஷமாகப்பட்டது.
அருகிலிருந்த கோதையிடம் காண்பித்து ‘பார்த்தாயா? இன்று பெருமானுக்கு மாலை மிக அற்புதமாக அமைந்துவிட்டது.’ கோதை மாலையைப் பார்த்து வியந்தாள். குடலையில், தொடுத்த மாலையை வைத்துவிட்டு, பெரியாழ்வார் நித்ய அனுஷ்டானங்கள் செய்யச் சென்றார். கோதைக்கு மாலையைப் பார்த்தது முதலே பரவசம் பொங்கியது. குடலையிலிருந்து மாலையை எடுத்தாள். தான் சூட்டிக்கொண்டால் எப்படியிருக்கும்?
மனதில் எண்ணம் தோன்றிய அந்தக் கணமே சூடிக்கொண்டாள். தன் ஆடையின் வண்ணம் இந்த மாலையின் வண்ணத்துடன் பொருந்தியிருப்பதாகப் பட்டது. முன்னும் பின்னும் நடந்தாள். தன் கூந்தலில், மாலையிலிருந்த ஒரு மலர் சிக்கிக் கொண்டதை உணர்ந்தாள். அதைச் சரி செய்தாள். அந்தத் தருணத்தில் கூந்தலிலிருந்து ஒரு நீண்ட முடிக்கற்றை மாலையில் கோதை அறியாமலேயே சேர்ந்துவிட்டது. அதே நேரம் பெரிய கோயிலினுள்ளே வடபெருங்கோவிலுடையான் புன்னகைத்தான். நீண்ட மலர் மாலை, அவளின் பாதங்களையும் தாண்டித் தரையில் புரண்டது. மாலையைத் தரையில் படாமல் உயர்த்திப் பிடித்தாள்.
‘கண்ணா! நான் அழகாக இருக்கிறேனா? நீ சூட்டி நான் தரிக்க வேண்டியது. நீயும் நானும் ஒன்றுதானே! அதனால் நானே சூடிக்கொண்டுவிட்டேன்.’ நான் அழகா? என்னை உனக்குப் பிடிக்குமா? பிடிக்கத்தானே வேண்டும்! என்னை உனக்குப் பிடிக்கும் என்பதை, எனக்கு எப்படி உணர்த்துவாய்? தன்னையும் மறந்து, தான் எப்படியிருக்கிறோம் என்று பார்க்கும் ஆவலில் தோட்டத்தை நோக்கி நடக்கலானாள். அங்குள்ள சிறிய கிணற்றில் தன் முகம் பார்க்க எத்தனித்தாள்.கூடத்திற்கு திரும்பிய பெரியாழ்வார் குடலையில் மாலையையும், கோதையையும் ஒருங்கே தேடினார்.
`‘கோதை! கோதை!’’ என்று குரலெழுப்பியபடியே தோட்டத்திற்கு வர, குரல் கேட்டு கோதை முகம் திருப்பினாள். மாலையைச் சூடியபடி இருந்த அவளின் தோற்றம் கண்டு, ‘`கண்ணா! கேசவா! நாராயணா!’’ எனப் பெருங்குரல் கொடுத்தபடி அவளை நோக்கி வந்தார். தான் பெருமாளுக்காகப் பார்த்துப்பார்த்துத் தொடுத்த மாலையைச் சூடிக்கொண்டு கோதை நின்றிருந்த கோலத்தைக் கண்டு பதைபதைத்தார்.
`‘ஆண்டவனுக்கென்று தொடுக்கப்பட்ட மாலையை மானிடர் சூடிக்கொள்வது மகா பாவம். மாபெரும் அபசாரம்! இத்தனை நாள் நான் செய்துவந்த கைங்கர்யத்திற்குப் பெருத்த களங்கத்தைச் சேர்த்துவிட்டாயே! உன்னைக் கடிந்து கொள்வதற்குக்கூட என் மனம் இசையவில்லை. இனி இப்படிச் செய்யாதே’’ சொல்லும்போதே அவருக்கு அழுகை முட்டியது.
கோதை, அவரின் வார்த்தைகளைக் கேட்டு விக்கித்துப் போனாள்.
இப்பொழுது இந்த மாலையை நான் என்ன செய்யட்டும்? என்பது போல அவரைப் பார்த்தாள். பெரியாழ்வார் அவளின் பார்வையைத் தவிர்த்தார். கண்ணன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில், மாலையை மெதுவாகக் கழற்றி, முற்றத்தின் மேடையில் கோதை வைத்தாள். மாலையை மெதுவாக ஒரு முறைத் தொட்டாள். கண்களில் ஒற்றிக் கொண்டாள். பெரியாழ்வார் அவசர அவசரமாக வேறொரு மாலையைத் தொடுக்க ஆரம்பித்தார். மலர்கள், தொடுக்கும்போதே கை நழுவிச் சென்றன. மனதில் பதற்றம். நேரமாகிவிட்டதே என்கிற தவிப்பு. தன்னையுமறியாமல் பாசுரம் பாடினார்.
“உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்’’
‘`நீ உடுத்துக் களைந்த உன் பீதாம்பரம், நீ சூடிக்களைந்த உன் மாலை என நாங்கள், அவைகளை உன் பிரசாதமாகக் கருதி நெகிழும் தொண்டர்கள். பாசுரத்தின் பொருள் உணர, பெரியாழ்வாருக்கு ‘இப்படி நேர்ந்துவிட்டதே!’ என்று நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது. பாசுரத்தை முழுதும் பாட இயலாமல் விசும்பினார். ஒரு வழியாக ஒரு மாலையைத் தொடுத்தார். குடலையில் இட்டுக்கொண்டு கோயிலுக்கு ஒட்டமும் நடையுமாகச் சென்றார். சந்நதியை அடைந்தார். பெருமாளிடம் மன்னிப்பு கேட்கும் விதமாகப் பணிந்து வணங்கினார். மாலையைப் பெருமானுக்குச் சூட்டினார்.
சூட்டிய வேகத்திலேயே, மாலை, பெருமாள் கழுத்திலிருந்து கழன்றது. பெரியாழ்வார், `‘ஏன் இப்படி! மாலையை ஏற்றுக்கொண்டு அருள வேண்டும்’’
‘`ஆழ்வாரே! எனக்கு கோதை சூடி மகிழ்ந்தாளே, அந்த மாலைதான் வேண்டும். இன்று மட்டுமல்ல, என்றுமே!’’ என்று அவரின் குரல் அசரீரியாய் ஒலித்தது. பெரியாழ்வார் திகைத்தார். நெகிழ்ந்தார். கண்களில் நீர் வடிய, இல்லம் சென்று, கோதையிடம் செய்தி சொன்னார். கோதை, தன் காதலும், பக்தியும் அங்கீகரிக்கப்பட்டதாக எண்ணினாள். பரவசமானாள். எந்தக் கேள்வியும் கேட்கத் தோன்றவில்லை. பெரியாழ்வார், கோதை சூடிய மாலையை எடுத்துக் கொண்டு, கோதையும் உடன் வர, மீண்டும் சந்நதி அடைந்தார். பெரியாழ்வார் பக்தியுடன், கோதை சூடிக் களைந்த மாலையை பெருமானுக்கு சார்த்தினார். பெருமான் கோதை சூடிக்கொடுத்த மாலையை ஏற்றுக்கொண்டார், அவளின் காதலையுந்தான்!
பெரியாழ்வார் கோதையை அருகில் அழைத்து நெற்றியில் முத்தமிட்டார். இன்று முதல் நீ `‘ஆண்டாள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி!’’ என்று சொல்ல, கோதை என்கிற ஆண்டாள் மகிழ்ந்தாள். நாட்கள் கடந்தன. தான் சூடிய மாலையை அணிந்தவன், இன்னும் தனக்கு மாலை சூட்ட வராததால், ஆண்டாள் வாடிப்போனாள். தான் மனதில் வரித்தவனை மாலையிட, மன்மதனை வேண்டி, ‘தை நீராடல்’ என்ற நோன்பை ஆண்டாள் துவங்கினாள். அவளின் மனவோட்டத்தைப் பாசுரங்களாக்கினாள். அதுவே நாச்சியார் திருமொழியாகிற்று.
தான் ஒருவேளை நாராயணனை மணமுடிக்காமல் போனால், உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் உறுதியேற்றாள். `‘மன்னு பெரும் புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக என் சங்கிழக்கும் வழக்கு உண்டே’’ மாதவனை நினைத்துத் தான் உருகி இளைத்துக்கொண்டே வருவதாக பாடுகிறாள். பொதுவாக மோதிரம் என்பது கைவிரலில் அணிந்துகொள்ளும் அளவே உள்ளது. அதை என் கைக்கு வளையலாகும் நிலை இப்பொழுது. அதை இன்னும் என் இடுப்பில் ஒட்டியாணமாக அணியும்படி ஆக்கிவிடாதே’ என புலம்பலாய் கவிதை சொன்னாள். உள்ளத்தில் புகுந்து எப்பொழுதும் என்னுடன் இருப்பவன், தன் உருவைக் காட்டாமல், கூத்தாடி என்னை உயிரோடு கொல்கிறான்.
‘வெள்ளை விளி சங்கு இட கையிற் கொண்ட விமலன் எனக்கு உருக்காட்டான் உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர் பெய்து கூத்தாட்டுக் காணும்’ என பாசுரம் படைத்தாள்.
ஆண்டாள் பித்துப்பிடித்தவள் போல் ஆனாள். ‘நான் கனவில் உன்னிடம் பேசுகிறேனா? நேரில் பிரார்த்தனையாய் புலம்புகிறேனா? பாசுரங்களில் சொல்லுவதெல்லாம் ஒரு துளிதான். உனக்கான என் காத்திருப்பை எந்த இலக்கியமும் சொல்லி மாளாது. உன்னைப் பிரிந்து தனியே இப்படிக் கவிதையாய், பாசுரமாய் பாடியிருப்பதைவிட, உன்னுடனிருந்து மெளனமாய் இருக்கிற வரம் தரமாட்டாயா? உன்னைப் பற்றி அடிக்கடி நினைக்கும்போது, உன் முகத்தை மட்டும் நினைவில் கொள்வதில்லை – உன் குணங்களை உள்வாங்கிக் கொள்கிறேன். அது இன்னமும் உன் மீதான காதலை நீளச்செய்கிறது.
கனவில் மட்டும் நீ நல்லவன். கொஞ்சுவ தென்ன, முத்தமிடுவதென்ன, என் கரம் பற்றுவதென்ன, எனக்கு ஒரு குறையுமில்லை. நேரில் வந்து, நிஜத்தில் என் கரம் பற்றும் எண்ணம் இருக்கிறதா? சொல்லு கண்ணா! சொல்லு!’ கனவில் உதித்த கடைசி வார்த்தை பெரியாழ்வாரை எழுப்பியது.`‘என்ன சொல்ல வேண்டும்? யார் சொல்ல வேண்டும்?’’ என்று பெரியாழ்வார் வினவினார். தயங்கியபடியே, ‘`என்னைக் கரம் பிடிக்க வருவதாகச் சொல்லச் சொல்லி கண்ணனை வேண்டினேன்.
எனக்கு நனவில் எந்த பதிலும் சொல்லாமல் நாட்கள் கழிகின்றன. நீங்கள் என் தந்தை. நீங்கள் பெரியாழ்வார். அவரின் அத்யந்த பக்தர். நீங்களாவது அவரைக்கேட்டுச் சொல்லுங்கள்’’`‘சரி. உனக்கு அந்த பெருமான் மீது பக்தியும், அவரையே மணந்து கொள்ள வேண்டும் என்கிற உறுதியான எண்ணமும் இருக்கிறது. தெய்வத்தை ஒரு மனுஷி மணந்து கொள்வதென்பது நடக்குமா? சாத்தியப்படுமா என்ற கேள்விகளை நான் எழுப்பவில்லை. உனக்கு நம்பிக்கையிருந்தால் போதும்’’‘`சங்கை முழங்கி, போரைத் துவங்கி, பின் வென்று ருக்மிணியைக் கரம் பிடித்தவன். வில்லை முறித்து சப்தமெழுப்பி, சீதையைக் கரம் பிடித்தவன் என்னையும் கரம் பிடிப்பான். நம்புகிறேன்’’ ஆண்டாள் அறுதியிட்டு பதிலளித்தாள்.
`‘உன் பக்தியும், உன் சத்தியமான பிரேமையும், அந்த பெருமானை உன்னிடம் வரவைக்கும். நேர்மறையான எண்ணத்தை எப்பொழுதும் மனதில் கொண்டு, அந்த எண்ணமே வாழ்வாக கொண்டிருக்கிறாய். உனக்கு, அந்த எண்ணம் நிறைவேறியே தீரும்’’`‘உங்களின் வாக்கு நிச்சயம் பலிக்கும். நான் அவரை அடைவேன் என்றில்லாமல், அவரே என்னைத் தேடி வருவார் என்று ஆசிர்வதித்தது என்னை நெகிழ வைக்கிறது’’ ஆண்டாளின் கண்களில் நீர் பனித்ததைக் கண்டு, கவனத்தை திருப்பும் முகமாக, பெரியாழ்வார், `‘எல்லாம் சரி. அந்தப் பெருமான் என்று சொல்கிறாய். நூற்றியெட்டு திவ்ய தேசங்கள், அது தவிர பிரியமான பெருமாள் கோயில்கள் என்று எண்ணற்ற இடங்களில் உய்கின்ற பெருமாளில், நீ மாலையிட விழையும் பெருமாள் யார்? என்று வினவினார். கண்களைத் துடைத்துக் கொண்டே, ஆண்டாள், ‘`தாங்களே ஒவ்வொரு பெருமாளைப் பற்றிச் சொல்லுங்கள். ஒன்றை அதில் தேர்வு செய்கிறேன்’’ என்றுகூற, பெரியாழ்வார் மெல்ல நகைத்தார்.
`‘ஆண்டாள்! நீயே அழைக்கலாமே’’
`‘என் அழைப்பு அவனுக்கு, இல்லை!
இல்லை! அவருக்கு ஒரு பொருட்டேயில்லை. அந்தப் பெருமானுக்குத் தாங்கள் என்றுமே நெருக்கமானவர். தாங்கள் ஒரு ஆச்சார்யரும்கூட! அவரின் மேல் தாங்கள் காட்டும் பரிவு உலகப் பிரசித்தம்! தங்கள் அழைப்பை அவரால் தட்டமுடியாது. இன்னும் சொல்லப் போனால், தங்கள் அழைப்புக்காக அவர் ஏங்கிக் கொண்டிருப்பார்’’ ஆண்டாளை அருகில் அழைத்து, தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார்.
`‘இது கற்பனையான ஒரு சுயம்வரம். நூற்றியெட்டு பெருமாள்களும் கருட வாகனத்தில் வரப் பிரார்த்திக்கிறேன்’’ ஆச்சார்யரின் பிரார்த்தனை பலித்தது. ஒவ்வொரு பெருமாளும் கருட வாகனத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்தார்கள். ஆண்டாளின் தோள் பற்றி, பெரியாழ்வார், ஒவ்வொரு பெருமாள் முன்னும் நிறுத்தினார். அறிமுகம் செய்யும் முகமாய் ஒவ்வொரு பெருமாளின் கீர்த்தியை உரைத்தார்.
`‘பத்ரி நாராயணப் பெருமாள் இவர்தான்…’’
`‘பத்ரிநாத்திலிருந்து வந்திருக்கும் பெருமாள். ஆஹா! இவரைப் பார்த்த மாத்திரத்தில் கையெடுத்து வணங்கத் தோன்றுகிறது’’
`‘இவர் அஹோபில அழகிய சிங்கர்’’
`‘அழகர்தான்! பார்க்கப் பார்க்க வியக்க வைக்கிறார்’’
`‘திருவேங்கடத்திலிருந்து வேங்கடவப் பெருமாள். இவர்….’’
‘`என்ன ஒரு தேஜஸ். மனம் மகிழ்கிறது. அப்பா!’’
`‘இவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்’’
`‘இவரைப் பார்க்கையில் இவரின் கம்பீரம் கவர்கிறது’’
‘`இதோ இவர் திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள்’’
“அற்புதம். அவரின் கோலம் சிந்தையைக் கொள்ளை கொள்கிறது’’
`‘நம் வடபெருங்கோவிலுடையானை மறந்தே போய்விட்டேன்’’
`‘தினமும் பார்த்தாலும் சலிக்காது. திவ்ய சொரூபி’’
‘`அடுத்து, நாம் தரிசிக்கப்போவது எல்லாப் பெருமாளுக்கும் தலைவனானவர். அரங்கநாதர்’’ என்று சொல்லி முடிக்கும் முன்பே, நாணத்தில் ஆண்டாள் தலை குனிந்தாள். தரையில் காலால் கோலம் வரைந்தபடியே, பேசலானாள்.`‘அப்பா! இவர்தான்! இவர்தான்! என் உள்ளம் கவர்ந்தவர். இவரின் பெயரை நீங்கள் உச்சரித்த கணமே எனக்கு மெய்சிலிர்க்கிறது. இவருடனே இருந்துவிடமாட்டேனா? எனத் தோன்றுகிறது. நான் மணம் செய்ய வேண்டும் என்று நினைப்பது இவரைத்தான். உங்களிடம் சொல்ல என் நாணம் தடுக்கிறது. தென் திசை நோக்கி இவர் சயனித்திருப்பதே, என்னைப் பார்த்தபடியே அவர் இருக்கத்தான். வராக அவதாரத்தில், பூமியாகிய என்னைக் காத்தவரும் இவர்தான்! அந்த ஆயர்பாடியில் மாயங்கள் செய்த அந்த ஜாலக் கண்ணனும் இவர்தான்!
“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன்’’
– என்பது பாசுரம். அது சத்திய வாக்கு.
பெரியாழ்வாருக்கு மகளின் மனம் புரிந்தது. அவள் நேசிக்கிற சத்தியம் அவளுக்கு அவரைக் கொண்டுவந்து சேர்க்கும் என முழுமையாய் நம்பினார். தன்னுடைய பங்களிப்பு இதில் என்ன என்பது விளங்காமல் உறங்கச் சென்றார். அயர்ந்து தூங்கியவரின் கனவில் பெருமாள் தோன்றினார். மணமுடிக்க மறுநாளே ஸ்ரீவில்லிப்புத்தூர் வருவதாக உறுதி சொன்னார். பெருமாளின் திருவுள்ளம், அனைத்து ஏற்பாடுகளும் மளமளவென்று நடந்த வண்ணமிருந்தது.
ஆண்டாள் தன் அணுக்கமான தோழி சுதாமயியை அழைத்தாள். `‘சுதாமயி! என் தந்தையிடம் சொல்லாத, சொல்ல இயலாத என் கண்ணன் மீதான காதல் செய்திகளை உன்னிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளேன். நீ எனக்குச் செய்ய வேண்டியதெல்லாம் என்ன தெரியுமா? வாரணம் ஆயிரம் தொடங்கி, கைத்தலம் பற்றும் நிகழ்வு வரை கனவாய், கவிதையாய் உன்னிடம் சொல்லியுள்ளேன்.
இன்று மாலை அவர் வந்து விடுவார். அவரை ஊர்வலமாக அழைத்து வருவதில் தொடங்கி, நாங்கள் ஸ்ரீரங்கம் செல்லும்வரை ஒன்றுவிடாமல், நேரலையாய் எனக்குத் தெரிவிப்பாயா? எனக்கு தோன்றியவை, வெறும் கனவுகளின் தொகுப்பல்ல. என் கனவில் அவர் தோன்றி, எனக்கு அவர் அளித்த நம்பிக்கைகள்.’ சுதாமயி, ஆண்டாளின் கரங்களைப் பற்றியபடி, `‘ஊர் உலகத்திற்கு நீ ஆண்டாள், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, நாச்சியார்! ஆனால் நீ, எனக்கு என்றுமே கோதை! என்னுடன் ஆயர்பாடியில் வளர்ந்த பிரியமான தோழி கோதை’’
(அடுத்த இதழில்…)
கோதண்டராமன்
