கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள 21 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டத்தின் கீழ் 9 வட்டாரங்களில் 1,120 குழந்தை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மையங்கள் வாயிலாக குழந்தைகளின் எடை, வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. 21 குழந்தைகள் வயதிற்கேற்ற எடை குறைவாக உள்ள குழந்தைகள், உயரத்திற்கேற்ற எடை குறைவாக உள்ள குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகள் கண்டறியப்பட்டன. இந்த குழந்தைகளுக்கு இணை ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு முதல் மூன்றாம் வாரத்திற்கு வேர்க்கடலை உருண்டை, வேகவைத்த பச்சைபயிறு, பேரிச்சம்பழம், நெய் கலந்த கேழ்வரகு உருண்டை, வருத்த பொட்டுக்கடலை, பால் வழங்கப்படவுள்ளன. இதுபோன்று இரண்டாவது மற்றும் நான்காவது வாரத்திற்கு சத்தான உணவுகள் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கிட மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.5.55 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவினை தொடர்ந்து குழந்தைகளுக்கு வழங்கினால் தான் ஊட்டச்சத்து நிலை மேம்படும். எனவே தொடர்ந்து ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, திருநாவலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் குழந்தைகள் மைய அமைப்பாளர், பணியார்கள் கலந்து கொண்டனர். …
The post குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவு வழங்கிட வேண்டும்-மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் appeared first on Dinakaran.