சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் வெப்ப சலனம், இலங்கை மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாகவும் தென் மாவட்டங்கள் தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சேர்ந்த மாவட்டங்களான ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 120 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேல் பவானி 70 மிமீ, திருப்பூர், ஓமலூர் தலா 60 மிமீ, திருமூர்த்தி அணை, வறளியாறு, அழகரை எஸ்டேட், பந்தலூர், குமாரபாளையம் தலா 50 மிமீ, ஆலங்காயம், குன்னூர், நடுவட்டம் தலா 40 மிமீ, தேவாலா, தம்மம்பட்டி, தர்மபுரி, காங்கேயம், பாவானி, ஊத்துக்குளி, கூடலூர் கிருஷ்ணகிரி, ஆம்பூர் தலா 30 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், லட்ச தீவுப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும். அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் வருகிற 18 மற்றும் 19ம் தேதிகளில் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
The post தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.