விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை திரவ வடிவில் மாற்றி கடத்த முயற்சி

திருமலை : விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை திரடி வடிவில் மாற்றி கடத்த முயன்ற சென்னையை சேர்ந்த 2 பேர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனந்தபூர் சரக டிஐஜி ரவிபிரகாஷ் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது: மாநில டிஜிபி உத்தரவுப்படி கஞ்சா, கடத்தல் குறித்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடத்தல்காரர்கள் புதிய முறையில் கஞ்சாவை திரவமாக்கி கடத்த ஆரம்பித்துள்ளனர். புத்தூர் டிஎஸ்பி யஷ்வந்த் மற்றும் போலீசார் புத்தூர் சர்ச் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகப்படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அனந்தபுரை சேர்ந்த ஜானுகுண்டமோகன், அஜய்குமார், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துகோட்டையை சேர்ந்த பிரசாந்த், சென்னை மாதவரத்தை சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ₹7.17 லட்சம் 1.435 கிலோ திரவ கஞ்சா, ₹2 லட்சம் மதிப்புள்ள பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து நடத்திய விசாரணையில், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு திரவ கஞ்சாவை கடத்தி, அங்கிருந்து மற்ற இடங்களுக்கு விற்க வந்துள்ளனர். காவலராக பணிபுரிந்து வந்த ஜானுகுண்டா மோகன் கஞ்சா கடத்தியதாக கைது செய்து சஸ்பெண்ட் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வந்த பின் மீண்டும் அதேதொழிலை செய்து வந்துள்ளார். போலீசார் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் கஞ்சா கடத்தலில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கஞ்சாவை திரவ வடிவில் மாற்றி கடத்தியுள்ளனர்.புத்தூரில் அஜய்குமார், பிரசாந்த் மற்றும் லோகேஷ் ஆகியோருக்கு திரவ கஞ்சாவை ஜானுகுண்டா மோகன் விற்றபோது போலீசார் கைது செய்தனர். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் இருக்க பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தவறான பாதைக்கு செல்கின்றனர். கல்லூரி பருவத்திலிருந்தே போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் வாழ்க்கையை இருளாக்கி கொண்டிருக்கின்றனர். அனந்தபூர் சரகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி புதிய மாவட்டமாக உருவானதன் மூலம் நெல்லூர் மாவட்டத்தின் சில பகுதிகள் திருப்பதி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட முக்கிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், போலீசாருக்கு கூடுதல் பொறுப்புகள் ஏற்றப்பட்டுள்ளது. ஆகையால், அப்பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார். அப்போது, மாவட்ட எஸ்பி பரமேஸ்வர் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்….

The post விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை திரவ வடிவில் மாற்றி கடத்த முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: