தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் குண்டுவீச்சு: வௌியேற முடியாமல் மக்கள் தவிப்பு

கீவ்: உக்ரைனில் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதால், போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரே நாளில் தோல்வி அடைந்தது. ரஷ்ய ராணுவம் மீண்டும் குண்டுவீசி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. தொடர் தாக்குதலால் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர முடியாமல் உக்ரைன் மக்கள் தவிக்கின்றனர். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் கெர்சன் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து பல நகரங்களில் குண்டுவீசி நாட்டையே சர்வநாசமாக்கி வருகிறது. குறிப்பாக, கார்கிவ், மரியுபோல், சுமி போன்ற நகரங்களில் உச்சகட்ட தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக நடந்த தொடர் தாக்குதலால், பல நகரங்களில் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான மீட்பு பணிகளுக்காக மரியுபோல், வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள நேற்று முன்தினம் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், மக்களை வெளியேற்றும் பணியை உக்ரைன் ராணுவம் மேற்கொண்டது. பல மக்கள் தங்கள் குழந்தைகளுடன் உடைமைகளுடன் நகரை விட்டு வெளியேற முற்பட்டனர்.ஆனால், நகரை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய பாதைகளை ரஷ்ய ராணுவம் முடக்கியது. மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பல இடங்களில் போர் விமானங்கள் மூலமாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியது. அதே சமயம், உக்ரைன் ராணுவம் தான் துப்பாக்கிச்சூடு நடத்தி, மக்கள் வெளியேறுவதை தடுப்பதாக ரஷ்ய ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. இதன் காரணமாக, சில மணி நேரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. நேற்று முன்தினம் இரவில் இருந்து மீண்டும் மரியுபோலில் ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழியத் தொடங்கியது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. சுமியில் உள்ள பல பல்கலைக்கழக கட்டிடங்கள் குண்டுவீச்சில் தரைமட்டமாகி உள்ளன. வினிட்ஸ்யா நகரில் விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் முற்றிலும் அழித்து நாசமாக்கியது. மரியுபோலில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், பல இடங்களில் பதுங்கு குழிகளில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை வெளியேற்றும் பணியில் உக்ரைன் ராணுவம் 2வது நாளாக நேற்றும் ஈடுபட முயற்சித்தது. ஆனால், 11வது நாளாக நேற்றும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதால், மக்களை வெளியேற்ற முடியவில்லை என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, கருங்கடல் பகுதியை ஒட்டிய உக்ரைன் துறைமுகங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக ஒடெசா துறைமுக நகரை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு தாக்குதல் நடத்த ரஷ்ய படைகள் சூழ்ந்துள்ளன. தற்காலிக போர் நிறுத்தம் தோல்வி அடைந்ததால், உக்ரைனில் போர் ஓய்வதற்கான வாய்ப்புகள் வலுவிழந்துள்ளன. இதன் காரணமாக, உக்ரைன் மக்கள் அகதிகளாக போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் சுமார் 15 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். 2ம் உலகப் போருக்குப் பிறகு, குறுகிய நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி வருவது இதுவே முதல் முறை என ஐநா கவலை தெரிவித்துள்ளது.* ரத்தம் சிந்தினாலும் வீழ்ந்து விடவில்லைஉக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் மிகுந்த பலத்துடன் போராடி வருகிறோம். ரஷ்ய ராணுவத்தின் 11,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ஏராளமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டாங்கிகளை தகர்த்துள்ளோம். போர்க்களத்தில் ரஷ்யா பேரழிவை சந்தித்துள்ளது. உக்ரைனும் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் வீழ்ந்து விடவில்லை. எங்கள் 2 கால்களும் களத்தில் இன்னும் வலிமையாக ஊன்றியபடி இருக்கின்றன,’’ என்றார்.* பைடனிடம் உதவி கேட்ட ஜெலன்ஸ்கிஉக்ரைனுக்கு  ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூடுதல் உதவி கோரினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், உக்ரைனுக்கு நிதி உதவிகள் செய்ய வேண்டும் எனவும், ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்….

The post தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் குண்டுவீச்சு: வௌியேற முடியாமல் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: