ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் சரியான முகவரிக்கு அனுப்பும் மனுக்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்: ஆணைய தலைவர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் முகவரிக்கு அனுப்பும் மனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்  ஏற்படுத்தப்பட்டு தற்காலிகமாக எண். 31, செனடாப் 2வது சந்து, தேனாம்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ள தாட்கோ அலுவலகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. தேசிய பட்டியல் சமூகத்தினர் ஆணையம், தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையம் ஆகியவை நீண்ட நாட்கள் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.தேசிய பட்டியல் சமூகத்தினர் ஆணையத்தின் மாநில அலுவலகம் சென்னை, சாஸ்திரிபவனில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த ஆணையங்களுக்கு இடையிலான வேறுபாடு தெரியாமல், மாநில ஆணையத்தின் முகவரியாக  சாஸ்திரிபவனை குறிப்பிட்டும், தேசிய ஆணையத்தின் முகவரியாக தமிழ்நாடு ஆணையத்தின் முகவரியை குறிப்பிட்டும், மனுக்கள் அனுப்புகிறார்கள். அந்த மனுக்களை பரிசீலனை செய்வதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆகவே தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு மனு கொடுக்க விரும்புபவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தங்கள் மனுக்களை அனுப்ப வேண்டும். மாநில ஆணையத்தில் மனு கொடுக்க விரும்புவர்கள், அதே சமயம் தேசிய பட்டியல் இனத்தோர் ஆணையத்திற்கோ அல்லது தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திற்கோ அதே போன்றதொரு மனு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சொல்லப்போனால், ஒரே மனுவை தேசிய பட்டியல்  இனத்தோர் ஆணையம் அல்லது தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் ஆகிய இரண்டுக்கும்  முகவரியிட்டு அனுப்பி வைக்கிறார்கள். இரு ஆணையத்திற்கும் ஒரு சேர மனு அனுப்புவது மாநில ஆணையம் தன்னுடைய பணியை செய்வதற்கு நடைமுறை சிக்கலை ஏற்படுத்துகிறது. இதை உணர்ந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும். சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை என்றால், அந்த தபால் பரிசீலனை செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படும். மனுக்கள், புகார்களை மாநில ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர் குறிப்பிட்டு அனுப்ப கூடாது. ஆணையத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டு ஆணையத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் சரியான முகவரிக்கு அனுப்பும் மனுக்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்: ஆணைய தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: