பசுமை இழந்த வனம் இடம்பெயரும் வன விலங்குகள்

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள செடி கொடிகள் கருகி பசுமை இழந்து காணப்படுவதால், தீவன தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் உணவு தேடி இடம்பெயர துவங்கியுள்ளன.நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உறைபனி பொழிவு நிலவி வருகிறது. கடந்த மாதத்தில் ஊட்டி மற்றும் சுற்ற வட்டார பகுதிகளில் ஒரு டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை சென்றது. குறிப்பாக தலைக்குந்தா, சோலூர், லவ்டேல், கேத்தி, ஊட்டி, நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உறைப்பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக தேயிலை செடிகள் கருகின. மேலும் முதுமலை, தெங்குமரஹாடா, சிறியூர், பொக்காபுரம், ஆனைக்கட்டி வனப்பகுதிகளிலும், நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட அவலாஞ்சி, அப்பர்பவானி, கோரக்குந்தா மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வனங்களிலும் உறைபனி காரணமாக செடி கொடிகள் கருகியுள்ளன.பனி காரணமாக வனங்களில் பசுமை பரப்பு குறைந்துள்ளதால் விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட துவங்கிவிட்டது. மேலும், குட்டைகள் மற்றும் குளங்களிலும் நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது. இதனால், இங்கு வாழும் யானைகள், புலிகள், காட்டுமாடுகள் மற்றும் மான்கள் உட்பட அனைத்து விலங்குகளும் தற்போது தண்ணீரை தேடியும், பசுமையை தேடியும் நகர துவங்கியுள்ளன. வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர கூடிய அபாயமும் நீடிக்கிறது. செடி கொடிகள் கருகியுள்ளதால் காட்டு தீ ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது. இதனை தவிர்க்க வனத்துறை அதிகாரிகள் தீ தடுப்பு கோடுகள் அமைத்திருந்தாலும், காட்டு தீ ஏற்படாத வண்ணம் நாள் தோறும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்….

The post பசுமை இழந்த வனம் இடம்பெயரும் வன விலங்குகள் appeared first on Dinakaran.

Related Stories: