தீர்வு வேண்டும்

உக்ரைனை சுற்றிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை நவீன ஆயுதங்களுடன் ரஷ்யா குவித்துள்ளது. உக்ரைனை தாக்கினால் தக்க பதிலடி தரப்படும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. போர் நடத்துவதற்கு தேவையான 70 சதவீத பணிகளை ரஷ்யா செய்து முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போர்க்களத்தில் ரஷ்யா-அமெரிக்க படைகள் நேரிடையாக மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நலனுக்கு நல்லதல்ல என்பதை ஒவ்வொரு நாடும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தநிலையில், உக்ரைன் விஷயம் உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் மூலம் ரஷ்யா-அமெரிக்கா நேரிடையாக மோதினால், ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களத்தில் இறங்கும். சீனாவை தொடர்ந்து, வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அமெரிக்காவுக்கு எதிராக உள்ள நாடுகள் போரில் பங்கேற்கும். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடுகளும் போர்க்களத்தில் குதிக்கும். சீனா, பாகிஸ்தான் ரஷ்யா பக்கம் இருப்பதால், ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க முடியாது. ரஷ்யா நெருங்கிய நண்பன் என்பதால் அமெரிக்காவுக்கும் இந்தியா ஆதரவு கொடுக்க முடியாது.முக்கியமாக, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட இரண்டு நாடுகளில் ஏதாவது, ஒரு நாட்டின் ஆதரவு இருந்தால் தான், இந்தியாவால் சீனாவுக்கு பல வகைகளில் செக் வைக்க முடியும். எனவே, இவ்விஷயத்தில் ஒன்றிய அரசு எந்த மாதிரியான முடிவை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அணு ஆயுதங்களை வைத்துள்ள வல்லரசு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால், உலக நாடுகள் பொருளாதார ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். சர்வதேச நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்படும். முக்கியமாக, பெட்ேரால், டீசல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை எகிறும். போர் சூழலை பயன்படுத்தி தீவிரவாத அமைப்புகள் தலைதூக்கும்.உலக நாடுகளுக்கு அறிவுரை வழங்கும் ரஷ்யா- அமெரிக்கா முதலில், தாங்கள் அமைதி மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். இவ்விரு நாடுகளுக்கும் அறிவுரை வழங்க எந்த ஒரு நாடும் இல்லாதது தான் வேதனைக்குரியது. அமெரிக்காவிடம் நேரிடையாக மோத முடியாது என்பதால் உக்ரைன் விவகாரத்தை பயன்படுத்தி ரஷ்யாவை சீனா மறைமுகமாக தூண்டி விட்டாலும் ஆச்சரியமில்லை. ரஷ்யா- அமெரிக்கா இடையே போர் ஏற்படுவதை தடுக்க ஒவ்வொரு நாடும் அறிவுரை வழங்க வேண்டும். இல்லாவிட்டால், போரினால் ஏற்படும் பாதிப்புகளை உலக நாடுகள் சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக, இதுவரை காணாத மிகப்பெரிய போர் அழிவை பார்க்க நேரிடும். ஆயுதங்களை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம். அது தான் உலக நலனுக்கு நல்லது….

The post தீர்வு வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: