5 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்.!

டெல்லி: 5 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த 10 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு உள்ளன. ஆனால் நாடு முழுவதும் கொரோனாவின் 3-வது அலை பரவி வருவதால் இந்த பிரசாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்து இருந்தது. இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி, இந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை உள் அரங்குகளில் மொத்த கொள்ளளவில் 50 சதவீதமாகவும், திறந்தவெளி பிரசார கூட்டங்களில் 30 சதவீதமாகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதே போல காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பாதயாத்திரை, ரோடு ஷோ, சைக்கிள் மற்றும் வாகனப் பேரணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள கூடுதல் தளர்வுகளின்படி, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி பிரச்சாரங்களில் அதிகபட்ச கொள்ளளவில் 50 சதவீதம் வரையிலான நபர்கள் பங்கேற்கலாம் என்றும் பாத யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, விதிகளை பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post 5 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்.! appeared first on Dinakaran.

Related Stories: