ஷில்லாங்: மேகாலயாவில் மாயமான 4,000 மெட்ரிக் டன் நிலக்கரி முறைகேடாக கடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேகாலயாவில் தற்போது கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி(என்பிபி), பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 2014ம் ஆண்டு முதல் நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி போக்குவரத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதனால் சட்டவிரோதமாக நிலக்கரி கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. ஜெயந்தியா மலைக்குன்றுகளின் அடிவாரத்தில் உள்ள ராஜாஜூ மற்றும் தியாஞ்கன் கிராமங்களில் உள்ள நிலக்கரி கிடங்குகளில், சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்ட நிலக்கரி சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் இந்த கிடங்குகளில் இருந்த 4,000 மெட்ரிக் டன் நிலக்கரி மாயமானது.
இதுகுறித்த வழக்கில், நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் மாநில அரசு பொறுப்பின்றி செயல்படுவதாக கண்டனம் தெரிவித்த மேகாலயா உயர் நீதிமன்றம், 4,000 மெட்ரிக் டன் நிலக்கரி எங்கே? என கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு பதிலளித்த மாநில வருவாய் மற்றும் கலால்துறை அமைச்சர் கைர்மென் ஷெல்லா, “மேகாலயாவில் அதிக மழை பெய்துள்ளது. மாயமான 4,000 மெட்ரிக் டன் நிலக்கரி மழை வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம்” என விநோதமான பதிலை கூறியிருந்தார்.இந்நிலையில், காணாமல் போன நிலக்கரி குறித்து விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
The post இது மேகாலயாவில் நடந்த கூத்து; 4,000 மெட்ரிக் டன் நிலக்கரியை அடித்துச்சென்ற மழை வெள்ளம்: விசாரிக்க அரசு உத்தரவு appeared first on Dinakaran.