காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா…
சென்ற இதழின் தொடர்ச்சி……
அப்போது, கங்கையைப் போன்ற ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட இந்த தேகமும், மனமும் ஏன் புனிதமானதில்லை என்று நினைக்க வேண்டும்.இப்படி நமக்கு காண்பித்து கொடுக்கும் தெளிவுதான் விக்ன யந்திரத்தை அழிப்பது. அப்போதுதான் நமக்கு உண்மையான புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஆரம்பத்திலேயே மகா கணபதியால் இந்தநிலை வந்து விட்டால் நாம் மெதுவாகச் சென்றாலும் கவலைப்பட மாட்டோம். அது பாட்டுக்கு சென்று கொண்டே இருக்கும். இப்படி இது சூட்சுமமாக நடப்பதால், அம்பாள் தன்னுடைய குழந்தையான மகா கணபதியின் மூலம் நடத்தி வைக்கிறாள். அதனால்தான், ஸ்ரீ வித்யாவில் தொடக்க மந்திரமே மகா கணபதி ஆகும். இதே மந்திரம் நிறைவாகும்போது உச்சிஷ்ட கணபதியில் சென்று நிறைவாகும். எந்த மகா கணபதி தொடக்கத்தில் யோகமாக இருந்தாரோ அவரே பின்னர் ஞானமாகவும் இருப்பார்.அப்போது உச்சிஷ்ட கணபதியாக மிக உயர்ந்த ரூபமாக நமக்கு தெரியவரும். எது அடைய வேண்டிய மேலான நிலையோ அங்கு கொண்டுபோய் சேர்க்கிறார். இந்த இரண்டு நாமங்களும் மேலே சொன்ன அனைத்தையும் காண்பித்துக் கொடுக்கிறது. இதற்கான தலமாக திருச்செங்காட்டங்குடி எனும் தலத்தைச் சொல்லலாம். இந்த தலத்தின் விசேஷமே சிவனையும் அம்பாளையும் விக்னேஸ்வரரே பூஜை செய்திருப்பதுதான். இந்த கோயிலுக்கே கணபதீச்சரம் அதாவது கணபதீஸ்வரம் என்றுதான் பெயர். ஈசனின் திருப்பெயர் உத்திராபதீஸ்வரர். அம்பாள், சூளிகாம்பாள். திருக்குழலம்மை.
கணபதி பூஜித்ததால் இந்த நாமாவிற்கான கோயிலாக இதைச் சொல்கிறோம் என்பதைத் தாண்டி, வேறொரு விஷயமும் உண்டு. இந்த தலத்தில்தான் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாருக்கு ஈசன் அருள் புரிந்தார். சுவாமி உத்தராபதீஸ்வரராக வடநாட்டு பைரவ யோகீஸரராக வந்து பிள்ளைக்கறி கேட்கிறார். பிள்ளைக்கறியை சிறுதொண்டர் சமைத்துக் கொடுக்கிறார். சீராளன் என்கிற அந்தப் பிள்ளையை மீண்டும் உயிர்பித்து சிறுதொண்ட நாயனாரையும் அவரது மனைவி பிள்ளை உட்பட எல்லோருக்கும் பேரருள் புரிந்து மோட்சம் சித்திக்கச் செய்தார். இதில் என்னவொரு சூட்சுமம் எனில், இந்த நாமாவில் நாம் என்ன பார்த்தோம். இந்த தேகம், இந்த மனசு எல்லாமும் கீழானது. ஆனால், அதெல்லாம் மேலானது என்று மகா கணபதி மூலமாக அம்பாள் செய்து விடுகிறாள் என்று பார்த்தோம் அல்லவா? இப்போது அந்த சிறுதொண்டர் அந்த பிள்ளைக்கறி சமைத்திருப்பார் அல்லவா? அப்போது அந்த சரீரத்தை போடும்போது அதை அவர்கள் கர்ம சரீரமாகத்தான் நினைத்திருப்பார்கள். சுவாமி கர்ம சரீரமான அந்தக் கறியை ஏற்றுக் கொண்டு மீண்டும் குழந்தையை வரவழைத்துக் கொடுக்கும்போதுதான் ஒரு விஷயத்தை காண்பித்துக் கொடுக்கிறார்.
பிள்ளைக்கறி சமைத்துக் கொடுத்தாயே… அது கர்ம சரீரமென்று நினைத்தாயே அதுதான் இல்லை. அந்த சரீரமே தெய்வீகமானது. அதனால் இதோ வா… என்று அந்தப் பிள்ளையை அழைத்துக் கொடுக்கிறார்.
எப்படி அம்பாள் இந்த கர்ம சரீரத்தை தெய்வீக்குகிறாள் என்பதையே, சுவாமி இங்கு திருவிளையாடல் மூலம் காண்பிக்கிறார். அதனாலேயும் இந்த நாமத்திற்கு இந்த தலத்தைச் சொல்லலாம்.
அஞ்ஞானத்தை போக்கடிக்கும் நாமம்
பண்டாஸுரேந்த்ர நிர்முக்த ஸஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ
இதற்கு முந்தைய இரண்டு நாமங்களுமே விநாயகர் சம்பந்தப்பட்டதாகும். எப்படி மகா கணபதியானவர் விக்ன யந்த்ரத்தை பொடிப் பொடியாக்கினார் என்று பார்த்தோம். முதலில் சைன்னியங்கள் என்கிற படைகள் அழிக்கப்பட்டன. அதற்குப் பிறகு பண்ட புத்திரர்கள் அழிக்கப்பட்டார்கள். பிறகு, மந்த்ரி சேனாதிபதி ஆகியோர் அழிக்கப்பட்டார்கள். அதற்குப்பிறகு அவன் வைத்த விக்ன யந்த்ரமும் அழித்தாகி விட்டது. இப்போது கிட்டத்தட்ட பண்டாசுரன் மட்டும்தான் இருக்கிறான்.இப்போது, இனி வேறு யாரையும் அனுப்பாது தானே இறங்கி போர் செய்வது என்று பண்டன் முடிவெடுத்து விட்டான். இப்போது பண்டாசுரனிடமிருந்து நிறைய விதம்விதமான ஆயுதங்களை பிரயோகம் செய்கிறான். அதற்கு எதிராக அம்பாளும் நிறைய ஆயுதங்களை பிரயோகம் செய்கிறாள்.
இந்த இரண்டும் சேர்ந்து எப்படியிருக்கிறதெனில், ஆயுதங்களே மழையாகப் பொழிந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது. ஸஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ … என்று இந்த நாமம் இந்த மழையை வர்ணிக்கின்றது. ஆயுதங்களில் பொதுவாக இரண்டு வகை உண்டு. ஒன்று அஸ்திரம். இரண்டு சஸ்திரம். இப்படி இரண்டு பேருமாக அஸ்திர சஸ்திரங்களை மாறி மாறி பொழிகின்றனர். பண்டாசுரனால் விடப்பட்ட ஆயுதங்களுக்கு எதிரான ஆயுதங்களை மழைபோல் பொழியக் கூடியவள் என்பதுதான், இந்த நாமாவினுடைய வெளிப்படையான கருத்து.
இந்த நாமத்தினுடைய உள்ளர்த்தம் தெரிந்து கொள்வதற்கு முன்பு சில விஷயங்களை பார்ப்போம் வாருங்கள். அஸ்திரமென்றால் என்ன? சஸ்திரமென்றால் என்ன? என்பதினுடைய வேறுபாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். அஸ்திரத்திற்கும் சஸ்திரத்திற்கும் இரண்டு வகையில் வித்தியாசம் உண்டு. சஸ்திரம் என்றால் கையிலேயே வைத்துக் கொண்டு போரிடுவது. வாள், கதாயுதம், இதையெல்லாம் கையிலேயே வைத்துக் கொண்டு நழுவ விட்டுவிடாமல் போரிட வேண்டும். அதாவது எதிராளி அருகேயிருக்கும்போது கையில் வைத்துக்கொண்டு போரிட வேண்டும். எதிராளி தூரத்தில் இருக்கும்போது கையிலிருந்து விடப்படக் கூடிய அஸ்திரங்கள். கையிலிருந்து பிரிந்து சென்று தாக்கி விட்டு வருவது அஸ்திரங்கள். வில்லில் இருந்து அம்பு புறப்படுவதுபோல்…. வேல் சூலாயுதம் போன்றவை போல. இந்த விளக்கங்களெல்லாம் போரில் சொல்லப்படக்கூடிய விளக்கங்கள் ஆகும்.
இன்னும் கொஞ்சம் ஆழமாக புராணங்களெல்லாம் இந்த அஸ்திர, சஸ்திரங்களுக்கெல்லாம் என்ன விளக்கங்கள் சொல்கிறது என்று பார்ப்போமா? மந்திரம் இல்லாமல் வெறும் ஆயுதப் பிரயோகம் செய்தால் அது சஸ்திரம். மந்திரத்தோடு ஒரு ஆயுதத்தை பிரயோகம் செய்தால் அது அஸ்திரம். வெறுமனே ஒரு வில்லையோ அல்லது அம்பையோ விட்டால் அது சஸ்திரம். ஆனால், அதே அம்பை ஒரு மந்திரத்தை பிரயோகப்படுத்தி, ஆக்னேயாஸ்திர மந்திரமோ அல்லது பாசுபதாஸ்திர மந்திரத்தையோ சொல்லி அல்லது இந்த மந்திரத்தை பிரயோகம் செய்து அந்த அஸ்திரத்தை விட்டால் அது அஸ்திரமாகும்.
இப்போது இந்த நாமாவான, பண்டாஸுரேந்த்ர நிர்முக்த ஸஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ… என்பது என்ன காண்பித்துக் கொடுக்கிறது. பொதுவாகப் பார்த்தால் பண்டாசுரன் போடுகின்ற ஆயுதங்களுக்கு எதிரான ஆயுதங்களை அம்பாள் போடுகின்றாள் என்பதுதான் இங்கு அர்த்தம். அவன் கையிலிருந்து வரக்கூடிய ஆயுதங்கள் இருக்கிறதல்லவா… அது எல்லாமே சஸ்திரங்களாக இருக்கிறது. அம்பாள் உபயோகப்படுத்துகிற ஆயுதங்கள் எல்லாமுமே அஸ்திரங்களாக இருக்கிறது. இப்போது இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம். சஸ்திரத்திற்கும் அஸ்திரத்திற்கும் என்ன வித்தியாசமோ அதுதான் இங்கு வித்தியாசம். பண்டாசுரனுடைய கையிலும் அஸ்திரங்களும் இருக்கும். சஸ்திரங்களும் இருக்கும். அம்பிகையிடமும் அஸ்திரமும் இருக்கும். சஸ்திரமும் இருக்கும். ஆனால், இந்த நாமா என்ன சொல்கிறதெனில், பண்டாசுரனிடமிருந்து வரும் சஸ்திரங்களுக்கு அம்பாள் எதிர் அஸ்திரங்கள் போடுகிறாள் என்று சொல்கிறது. இங்கு நமக்கு ஒரு கேள்வி வரும். ஏன் பண்டாசுரன் சஸ்திரம் மட்டும்தான் வைத்திருந்தானா? அஸ்திர வித்தை அவனுக்குத் தெரியாதா?
பண்டாசுரனுடைய ஆயுதங்களுக்கு ஏன் சஸ்திரம் என்று பெயரெனில், அம்பிகையினுடைய ஆயுதங்களுக்கு ஏன் அஸ்திரம் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும். கையை விட்டு வெளியிலேயே போகவில்லை என்றால், அது சஸ்திரம். அதற்கு மந்திரம் தேவையில்லை. இதற்கு உள்ளார்த்தம் என்னவென்று பார்த்தோமானால், பண்டாசுரனுக்குள் தோன்றுவதெல்லாம் அஞ்ஞான விருத்திகள். அதாவது அஞ்ஞான விருத்திகளுக்குத்தான் சஸ்திரமாகும். கையை விட்டு வெளியே போகவில்லை என்பது எதனால் எனில், அது limitationக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. அது அதற்குள்தான் வேலை செய்யும். அதற்கு மந்திரங்கள் தேவையில்லை என்பது என்ன அர்த்தம்.
மந்திரங்கள் என்றாலே மனனாத் த்ராயதே இதி மந்த்ரஹா… என்று பொருள். மனனம் செய்பவனை அல்லது மந்திரத்தை எண்ணுபவனை காப்பாற்றுவது என்று பொருள். இப்போது சஸ்திரத்திற்கு மந்திரம் தேவையில்லை என்பது , இந்த அஞ்ஞான விருத்திகள் இருக்கிறதல்லவா…
இதற்கு ஒரு மன ஒருமைப்பாடோ அல்லது focus சக்தி இதற்குத் தேவையில்லை. அது ஒரு limitation க்குள் இருக்கும். இது பண்டாசுரன் உபயோகப்படுத்தக் கூடிய சஸ்திரங்கள். ஆனால், அப்படியே அம்பாளின் பக்கம் வருவோம். அம்பாள் உபயோகப்படுத்தும் ஆயுதங்களுக்கும் என்ன பெயரெனில், அஸ்திரங்கள் என்று பெயர். அதாவது கையை விட்டு புறப்பட்டுப் போய் அழித்து விட்டு மீண்டும் திரும்ப வந்து விடும். அப்போது என்ன அர்த்தம் எனில், it is not subject to limitation. அதற்கடுத்து, அம்பாளின் ஆயுதங்கள் அனைத்தும் மந்திரப் பூர்வமானவை. ஒவ்வொரு அஸ்திரத்திற்கும் மந்திரம் இருக்கிறது. ஒருமைப்பட்ட மனதிலிருந்து உருவாகின்ற சக்தியையே மந்திரம் குறிக்கின்றது. அந்தச் சக்தி மூலமாகத்தான் இந்த ஞான விருத்திகள் செயல்படும். அப்போது இந்த ஞான விருத்திகள்தான் அம்பிகையின் கையிலிருக்கக் கூடிய அஸ்திரங்கள். அது எப்படி இருக்குமெனில், இந்த limitations இல்லாமல் beyond limitations ல் இருக்கும். அதே நேரத்தில் focused ஆக இருக்கும்.
நாம் கொஞ்சம் லௌகீகமாக பார்க்கும்போது இந்த விஷயம் கொஞ்சம் மாறுபாடாக இருக்கும். அதாவது, நாம் ஏதாவது limitation க்குள் இருந்தால்தான் focused ஆக இருப்போம். Limitation ஐ விட்டு வெளியே சென்றால் நம்முடைய focuse போயிடும். ஆனால், இங்கு எப்படியெனில், limited ஆக இருக்கக் கூடிய அஞ்ஞான விருத்திகளுக்கு focus கிடையாது. Limitations மேலே இருக்கக் கூடிய ஞான விருத்திகளுக்குத்தான் focus உண்டு. அத்யாத்மத்திற்கும் உலகியலுக்கும் அதுதான் வித்தியாசம். உலகியலில் நாம் என்ன சொல்வோம். ஒரு வட்டம் போட்டு நாம் அதற்குள்ளேயே இருந்து கொள்ள வேண்டும் என்று சொல்வோம். ஆனால், அத்யாத்மத்தில் அப்படியே எதிராகச் செல்லும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு limitations ஐ தகர்த்து தகர்த்து விரிவடைந்து கொண்டே இருக்கிறோமோ focus கூடிக்கொண்டே இருக்கும். விரிய விரிய குவியும். உலகியலில் என்ன நினைத்துக் கொள்வோமெனில், குவிய குவியத்தான் சுருங்கச் சுருங்கத்தான் விரியும் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால், அத்யாத்மத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு விரிகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு focus கூடிக்கொண்டே இருக்கும். இதுதான் ஞான விருத்தி. ஆனால், அஞ்ஞான விருத்தியானது நம்மை சுருக்கி சுருக்கி வைக்கும்.
அஞ்ஞான விருத்திகளால் நமக்கு focus கிடைக்கவே கிடைக்காது. ஆனால், ஞான விருத்தி நம்மை என்ன செய்கிறதெனில், நம்மை விரிவடையச் செய்கிறது. இப்போது அம்பிகையின் கையிலிருக்கக் கூடிய அஸ்திரங்கள் என்னவெனில், ஞான விருத்திகள். பண்டாசுரனுடைய கையிலிருக்கக் கூடிய சஸ்திரங்கள் அனைத்தும் அஞ்ஞான விருத்திகள். இந்த இரண்டும் மோதும்போது, எதுவொன்று limited ஆக focus இல்லாமல் இருக்கிறதோ அது அழிந்து போய்விடும். எதுவொன்று limitations அப்பாற்பட்டு focus ஆக இருக்கிறதோ அது என்றைக்குமே நிலைத்திருக்கும். இப்போது இங்கு பண்டாசுரனுடைய அஞ்ஞான விருத்திகள் என்கிற ஆயுதங்கள் அழிந்து போகும். அம்பாளினுடைய ஆயுதமான ஞான விருத்திதான் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டும் எங்கு நடக்கின்றதெனில், ஒரு சாதகனுக்குள்ளேயே நடக்கிறது. ஒரு சாதகனுக்குள்ளேயே பண்டாசுரனுடைய ஆயுதமான அஞ்ஞான விருத்திகளும் பிரயோகமாகின்றது. அதற்கு எதிர் பிரயோகமாக இருக்கக்கூடிய ஞான விருத்திகள் என்று சொல்லக் கூடிய, அம்பாளுடைய ஆயுதங்களும் பிரயோகமாகின்றது.
இந்த பண்டாசுரனுடைய ஆயுதங்கள் பிரயோகம் ஆகும்போது ஒரு limitationக்குள் போய் விடுகின்றான். சுருங்கிப் போய் விடுகின்றான். அந்த மனோசக்தி வேலை செய்யாமல் போய் விடுகின்றது. ஆனால், அம்பாள் என்கிற ஆத்ம சொரூபம் அங்கு பிரத்யட்சமாகி அம்பாளினுடைய அஸ்திரங்கள் என்று சொல்லக் கூடிய ஞான விருத்திகள் அங்கு பிரயோகமாகும்போது மனோ சக்தி அதிகமாகின்றது. எல்லா எல்லைகளையும் கடந்து செல்கிறான். நான் எதற்கும் கட்டுப்படாதவன் என்பதை உணர்கிறான். அதன் மூலம் அந்த நிலையான ஞான சொரூபத்தை உணர்ந்து கொள்கிறான். இதுதான் இந்த ஆயுதங்கள் மூலம் நமக்கு இந்த நாமமானது காண்பித்து கொடுக்கப்படுகிறது.
பகவத் கீதையில் தெய்வாசுர சம்பத் விபாகயோகம் என்று ஒரு அத்தியாயமுண்டு. இந்த ஒட்டு மொத்த அத்தியாயத்தையும் சுருக்கமாகச் சொன்னால் அதற்கு இந்த நாமாவை சொல்லலாம்.பண்டாஸுரேந்த்ர நிர்முக்த ஸஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ என்கிற இந்த நாமத்திற்குள் இந்த கீதையின் ஒட்டுமொத்த அத்தியாயமும் உள்ளது. ஏனெனில், கீதையில் தெய்வீக சம்பத் ஆசூரி சம்பத் என்று கிருஷ்ணன் பேசுவார். இந்த தெய்வீக சம்பத் தான் ஞான விருத்திகள். அம்பாள் கையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் அஸ்திரங்கள். ஆசுரி சம்பத்தான் பண்டாசுரனுடைய சஸ்திரங்கள். அஞ்ஞான விருத்திகள். எப்படி ஞான விருத்திகளால் அஞ்ஞான விருத்திகள் வெல்லப்படுகின்றது.
(சுழலும்)
The post தடைகளை தகர்க்கும் மஹாகணேசர் appeared first on Dinakaran.
