சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திருப்பம்; அப்ரூவராக மாறி உண்மையை சொல்வதாக இன்ஸ்பெக்டர் மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறி உண்மையை சொல்வதாக நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ல் போலீசார் விசாரணையின்போது தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2,027 பக்க குற்றப்பத்திரிகை, இரண்டாம் கட்டமாக 400 பக்கம் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுவரை 52 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் தர் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அரசுக்கும், காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் அப்ரூவர் ஆக மாற விரும்புகிறேன்.

என்னை தவிர்த்து மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும், உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன். எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும், மகனையும் இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க விரும்புகிறேன். இந்த வழக்கில் அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்’’ என கூறியுள்ளார். இந்த மனுவிற்கு சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்ேடார் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (ஜூலை 24) தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் தர் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திருப்பம்; அப்ரூவராக மாறி உண்மையை சொல்வதாக இன்ஸ்பெக்டர் மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: