தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை (டிட்டோ ஜாக்) சார்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஈரோடு தாலுகா அலுவலகம் முன் இரண்டு நாட்கள் சாலை மறியலில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
இதன்பேரில், முதல் நாளான நேற்று ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மகளிரணி செயலாளர் ரமாராணி போராட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்தியஅரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து ஊர்வலமாக திருமகன் ஈவெரா (கச்சேரி வீதி) சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனுராதா, விஜயன், மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 261 பெண்கள் உட்பட 435 ஆசிரியர்களை கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தகோரி ஈரோட்டில் மறியல்; 435 ஆசிரியர்கள் கைது appeared first on Dinakaran.
