×

ஐஐஎம் மாணவி பலாத்காரம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை

கொல்கத்தா: கொல்கத்தா ஐஐஎம் மாணவி பலாத்கார வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் (ஐஐஎம்) படிக்கும் மாணவி, கடந்த 11ம் தேதி சக மாணவர் ஒருவர் ஆண்கள் விடுதியில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கூறி உள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட மாணவனை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொல்கத்தா போலீசார் இவ்வழக்கை தீவிரமாக விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளனர். பலாத்கார சம்பவம் எதுவும் நடக்கவில்லை என மாணவியின் தந்தை கூறியிருக்கும் நிலையில், மாநில மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பெற்றோர் தரப்பில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நெருக்கடி தரப்படுகிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஐஐஎம் கொல்கத்தா பொறுப்பு இயக்குநர் சாய்பால் சட்டோபாத்யாய் கூறுகையில், ‘‘மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். நிலைமையை சமாளிக்க தேவையான அனைத்தையும் செய்யுமாறும் மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் நிர்வாக ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைத்து தருகிறோம்’’ என்றார்.

The post ஐஐஎம் மாணவி பலாத்காரம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Indian Institute of Management ,IIM ,Kolkata, West Bengal ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...