×

தேர்தல் ஆணையம் எப்போதும் மோடி அரசின் கைப்பாவை: கபில் சிபல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் ஆணையம் எப்போதுமே மோடி அரசின் கைப்பாவையாக இருந்து வருவதாக மாநிலங்களவை எம்பி கபில் சிபல் குற்றம்சாட்டி உள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மோடி அரசு ஆட்சிக்கு வந்தததில் இருந்து தேர்தல் ஆணையம் அரசின் கைப்பாவையாகவே எப்போதும் இருந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நடத்தையை பற்றி அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன்.

ஏனெனில், ஒவ்வொரு தேர்தல் ஆணையரும் ஒன்றிய அரசுடன் நெருக்கமடைவதில் முந்தையவர்களை விட அதிகமாக இருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. அந்த ஆணையம் எதிர்பார்க்கப்பட்ட சுதந்திரத்தை பிரதிபலிக்கவில்லை. பீகாரில் நடந்து வரும் தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை முற்றிலும் அரசியலமைப்புக்கு விரோதமானது.

குடியுரிமை தொடர்பான பிரச்னைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை, அதுவும் பூத் நிலை அதிகாரிகளை கொண்டு செய்கிறார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற பாஜ அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதாக நான் சொல்லி வருகிறேன். அதன்படி, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் என்பது பெரும்பான்மை அரசுகளை உறுதி செய்வதற்கான செயல்முறையாகும்.

ஏனெனில் ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள், ஆதிவாசிகளின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கினால் பெரும்பான்மை கட்சி எப்போதும் வெற்றி பெறுவதை உறுதி செய்யலாம். இது மிகவும் கவலைக்குரியது. வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேறு எந்தப் பிரச்னையையும் விடவும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பிரச்னை மிகவும் முக்கியமாக பேசப்பட வேண்டும்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வென்ற தொகுதிகளில் மட்டும் திடீரென்று வாக்காளர்கள் எப்படி அதிகரித்தார்கள் என்பதை தேர்தல் ஆணையத்தால் இன்னும் விளக்க முடியவில்லை. அதைப் பற்றியும் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

The post தேர்தல் ஆணையம் எப்போதும் மோடி அரசின் கைப்பாவை: கபில் சிபல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Modi government ,Kapil Sibal ,New Delhi ,Rajya Sabha ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...