
பாட்னா: பீகாரில் பெண்ணின் வாக்காளர் அடையாள அட்டையில் முதல்வர் நிதிஷ் குமார் புகைப்படம் இருந்ததால், வாக்காளர் அடையாள அட்டையின் தரவு மேலாண்மையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, மாநில அரசு நிர்வாகத்தைக் கடுமையாக பலரும் விமர்சித்துள்ளனர்.
பீகார் மாநிலம் மாதேபுரா நகராட்சியைச் சேர்ந்த அபிலாஷா குமாரி (30) என்ற பெண், தனது வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த முகவரியை மாற்றுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். அரசு வழங்கும் சேவைகளில் சரியான தகவல்கள் பதியப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் இந்த முகவரி திருத்தத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்குக் கிடைக்கவிருந்த புதிய வாக்காளர் அடையாள அட்டை பெரும் சர்ச்சையையும், கேலியையும் உண்டாக்கி உள்ளது. இந்நிலையில், முகவரி திருத்தம் செய்யப்பட்ட புதிய வாக்காளர் அட்டை தபால் மூலம் அபிலாஷாவிற்கு வந்துள்ளது. அதைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
அதில், அவரது முகவரி சரியாக மாற்றப்பட்டிருந்தாலும், அபிலாஷாவின் புகைப்படத்திற்குப் பதிலாக, கடுமையான வெயிலில் இருந்து கண்களைப் பாதுகாக்க, ஒரு கண்ணைச் சுருக்கியபடி இருக்கும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து வாக்குச் சாவடி நிலைய அதிகாரியிடம் முறையிட்டபோது, ‘இதை வெளியே சொல்லாமல் அமைதியாக இருங்கள்’ என்று அவர் கூறியதாகவும் அபிலாஷா குமாரி குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி, வாக்காளர் அடையாள அட்டையின் தரவு மேலாண்மையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, மாநில அரசு நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
The post பெண்ணின் வாக்காளர் அட்டையில் முதல்வர் நிதிஷ் புகைப்படம்: பீகாரில் நடந்த குளறுபடியால் அதிர்ச்சி appeared first on Dinakaran.
