×

உணவு கெட்டுப்போய்விட்டதாகக் கூறி விடுதி கேன்டீன் ஊழியரை அறைந்த சிவசேனா எம்எல்ஏ

மும்பை: மகாராஷ்டிராவில் துணைமுதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட், புல்தானா தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் இரவு மும்பையிலுள்ள எம்.எல்.ஏ விடுதியில் தங்கினார். அப்போது இரவு சாப்பாட்டை ஆர்டர் செய்தார். கேன்டீன் ஊழியர் உணவை கொண்டு வந்தார். ஆனால் அந்த உணவு கெட்டு போய்விட்டது என்றும், உணவில் இருந்து நாற்றம் வீசியது என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ கேன்டீன் நடத்துபவரிடம் தகராறு செய்து, உணவுக்கு பணம் தரமாட்டேன் என்றும் கூச்சலிட்டார்.  மேலும், அங்கிருந்த யாரும் உணவுக்குப் பணம் தரக்கூடாது என மிரட்டிய அவர், கேன்டீனின் பில் கவுன்டரில் இருந்தவரை அறைந்தார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது. இதை பார்த்த எதிர்க்கட்சியினர் கெய்க்வாட்டின் செயலுக்காக கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் கெய்க்வாட்டோ, இது போல முன்பும் கெட்டுப்போன உணவை வழங்கினார்கள் என்று அதற்காக இரண்டு அல்லது மூன்று முறை கண்டித்ததாக கூறினார்.

இந்த சம்பவத்துக்கு உத்தவ் கட்சி எம்.பி பிரியங்கா சதுர்வேதி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், ‘இதோ சிவசேனா கட்சி எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட்டை பாருங்கள். கடந்த ஆண்டு ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.11 லட்சம் தருகிறேன் என்று அறிவித்தார். இப்போது அப்பாவி ஊழியரை அறைந்துள்ளார். அவரை யாரும் கண்டிக்கவில்லை.

ஏனெனில் சிவசேனா, பாஜவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சி’, எனக் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பட்நவிசை அவதூறு செய்வதற்கான எம்எல்ஏவின் முயற்சியாக இது தோன்றுகிறது என உத்தவ் தாக்கரே சந்தேகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, கெட்டுப்போனதாகக் கூறப்பட்ட உணவு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சஞ்சய் கெய்க்வாட்டின் செயல், எம்எல்ஏக்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தும் என பட்நவிஸ் கூறியுள்ளார்.

The post உணவு கெட்டுப்போய்விட்டதாகக் கூறி விடுதி கேன்டீன் ஊழியரை அறைந்த சிவசேனா எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : Shiv Sena ,MLA ,Mumbai ,Sanjay Gaikwad ,Deputy Chief Minister ,Shinde ,Maharashtra ,Buldhana ,Shiv Sena MLA ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...