×

அமேதியில் தோல்வியடைந்ததால் விரக்தி மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்க சென்ற ஸ்மிரிதி இரானி

புது டெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான ஸ்மிருதி இரானி அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டு மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளார். முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லியில் பிறந்தவர். அவரது தந்தை பஞ்சாபி, தாய் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். ஸ்மிருதி இரானியின் கணவர் ஜூபின் இரானி. இந்த தம்பதிக்கு ஒரு மகன்,மகள் உள்ளனர். இவர் அரசியலுக்கு வருவதற்குமுன் மாடலாக இருந்தார்.

அதன் பிறகு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கியுங்கி சாஸ் பி கபி பஹூ தி( ஒரு காலத்தில் மாமியாரும் மருமகள் தானே) என்ற தொடரில் நடித்தார். 8 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த தொடரில் துளசி விரானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டு இருந்த போது 2003ல் பாஜவில் இணைந்தார். 2004ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளராக இருந்த கபில் சிபிலிடம் தோல்வியடைந்தார். 2010ல் பாஜ மகளிர் பிரிவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

2011ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ம் ஆண்டு தேர்தலில் உபியின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தலில் தோல்வியுற்றாலும் ஒன்றியத்தில் மோடி தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து 2019ல் அமேதி தொகுதியில் களமிறக்கப்பட்ட அவர் ராகுல் காந்தியை தோற்கடித்தார். பின்னர் கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதே அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியுற்றார்.

தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அவர் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் அவர் நடித்து பிரபலமான இந்தி தொடரின் 2வது சீசன் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. இதில் துளசி கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் மீண்டும் தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 25 வருடங்களாக, நான் இரண்டு சக்திவாய்ந்த தளங்களான – ஊடகம் மற்றும் பொது வாழ்வு ஆகியவற்றை கடந்து வந்துள்ளேன். ஒவ்வொன்றும் அதன் சொந்த தாக்கத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான அர்ப்பணிப்பைக் கோருகின்றன. நடிகையாக மட்டுமல்ல, மாற்றத்தை தூண்டுவதற்கும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் கதை சொல்லலின் சக்தியை நம்பும் ஒருவராக திரும்பி வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post அமேதியில் தோல்வியடைந்ததால் விரக்தி மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்க சென்ற ஸ்மிரிதி இரானி appeared first on Dinakaran.

Tags : Smriti Irani ,Amethi ,New Delhi ,Former Union Minister ,BJP ,Former minister ,Delhi ,Maharashtra ,
× RELATED மெஸ்ஸி வருகையால் வெடித்த கலவரம்;...