×

சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் புதிய வசதி அறிமுகம்: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது பதிவுத்துறையில் உள்ள 56 பதிவு மாவட்டங்களில் 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் தினந்தோறும் சராசரியாக பல ஆயிரம் பொதுமக்களுக்கு பத்திரபதிவு சேவைவழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கவும், காலத்துக்கு ஏற்றவாறு பதிவுத்துறையின் தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. சார்-பதிவாளர் அலுவலகங்களில், ஸ்டார் 2.0 மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பதிவு நாளிலேயே பத்திரத்தை பொதுமக்களுக்கு அளிக்க உத்தரவிடப்பட்டது. பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து குறித்து, கள ஆய்வு தேவைப்படும் நிகழ்வுகள் தவிர்த்து மற்ற அனைத்து பத்திரங்களையும் அதே நாளில் திருப்பித்தர வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு பணிகளை விரைவாக முடித்தாலும், சொத்து பரிமாற்றம் குறித்த விபரங்களை பதிவுத் துறையின் தகவல் தொகுப்பில் சேர்க்க ஓரிரு நாட்கள் ஆகும். இதன்பின் தான் பொது மக்கள், அந்த குறிப்பிட்ட சொத்து பரிமாற்றம் குறித்த வில்லங்க சான்றிதழை பெற முடியும்.

இந்நிலையில், பதிவு முடிந்த நாளிலேயே பத்திரம் கிடைக்கும் முன், வில்லங்க சான்றிதழை சம்பந்தப்பட்ட நபருக்கு மொபைல் போன் வாயிலாக அனுப்பும் புதிய நடைமுறையை, பதிவுத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பத்திரம் பதிவு செய்யும் போது அதற்கான தகவல்கள் உடனே தரவுத்தொகுப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன்பின், அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் இருக்கும் இணையதள லிங்கை கிளிக் செய்தால், அந்த சொத்துக்கு சமீபத்தில் செய்த பரிமாற்றம் பற்றிய வில்லங்க சான்றிதழை இலவசமாகப் பெற முடியும். இந்த சான்றிதழின் இணைப்பு 30 நாட்கள் செல்லுபடியாக இருக்கும். மக்கள் இதனை சொத்து வரி, மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு பெயர் மாற்றங்களைச் செய்ய பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் புதிய வசதி அறிமுகம்: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Registration Department ,Chennai ,Tamil Nadu ,Registration Department… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி...