×

நெல்லை மாவட்டத்தை கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்

*உயர்கல்வி வழிகாட்டுதல் சிறப்பு முகாமில் கலெக்டர் பேச்சு

நெல்லை : நெல்லை மாவட்டத்தை இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாமில் கலெக்டர் சுகுமார் பேசினார்.நெல்லை மாவட்டத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 14,847 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 13,285 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெற்றவர்களில் 1035 பேர் உயர்கல்வியில் சேராதது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் கலெக்டர் சுகுமார் தலைமையில் நடந்தது.

முகாமில் உயர்கல்வித்துறை, பொறியியல் துறை, தொழில்நுட்ப கல்வியியல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் மாணவ, மாணவிகள் அளித்த கோரிக்கைகள் மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு பேசுகையில்; நெல்லை மாவட்டத்தில் இடைநிற்றலை முழுவதுமாக தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அனைத்து மாணவ, மாணவிகளும் கல்வி கற்று சிறந்த பணியில் சேர்ந்து குடும்பத்திற்கு உதவியாக இருக்க வேண்டும்.

இந்த உன்னத நோக்கத்தோடு உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் படித்து உயர்கல்வியில் சேராத மாணவ, மாணவிகளை தலைமையாசிரியர் மூலம் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவர்களுக்கான உதவிகள் வழங்கி உயர்கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

12ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற 100% மாணவ, மாணவிகளும் உயர்கல்வியில் சேர வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலோசனைகள் தேவைபடுபவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறியலாம்.

மாணவ, மாணவிகள் இடைநிற்றல் இருந்தால் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனே தெரிவிக்க வேண்டும். நெல்லை மாவட்டம் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக அரசுப்பள்ளியில் படித்து ஐஐடியில் இடம் கிடைத்துள்ள 2 மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 7 மாணவ, மாணவிகளை கலெக்டர் பாராட்டினார். உயர்கல்வியில் சேர்வதற்கான கல்வி கட்டணம் செலுத்துவதற்காக தனது விருப்புரிமை மானியத்திலிருந்து தலா ரூ.3500 என 5 மாணவ, மாணவிகளுக்கு காசோலைகளை கலெக்டர் சுகுமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட கல்வி அலுவலர் சாய் சுப்புலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

The post நெல்லை மாவட்டத்தை கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,Collector ,Sukumar ,Dinakaran ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...