சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் புதிய தமிழகம் கட்சி இதுவரை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மது வேண்டும் என எந்த ஒரு அரசியல் கட்சியும் சொல்லவில்லை. ஆனால் நாம் தமிழர் கட்சி, கள் ஒரு உணவு என்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடியில் அண்மையில், தானே பனைமரம் ஏறி கள் இறக்கியதுடன் மற்றவர்களுக்கும் அதை குடிக்க கொடுத்ததற்காக சீமான் மீதும், போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் சீமானை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். கள் இறக்கியது மட்டுமல்லாமல் போலீஸ் வந்த போது அரிவாளை தூக்கி காட்டினால் என்ன அர்த்தம். தெரிந்தோ, தெரியாமலோ வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் சீமானுக்கு தொடர்ந்து பணம் அனுப்பி வருகின்றனர். அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழ் தேசிய அரசியலை செய்வதாக அவர்களை ஏமாற்றி, தமிழர்களை மதுவுக்கு அடிமையாக்கும் அரசியலை சீமான் இங்கு மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
The post கள் இறக்கி போராட்டம் நடத்திய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி appeared first on Dinakaran.