கால புருஷனுக்கு இருபத்தி ஏழாவது நட்சத்திரம் (27) ரேவதி நட்சத்திரம். ரேவதி என்பதே காலச்சக்கரத்தின் கடைசி நட்சத்திரமாக உள்ளது.ரேவதி இதன் அதிபதி புதன் ஆவார். இது ஒரு முழுமையான நட்சத்திரம்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அபிமன்யு, சனி பகவான் ஆகியோர் ஆவர். ரேவதி நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் கடைமீன், தோணி, மரக்கலம், சூலம், நாவாய் ஆகியனவாகும்.சமஸ்கிருதத்தின் வார்த்தையான ரேவத் என்ற சொல்லில் இருந்து பிறந்ததுதான் ரேவதி. ரேவதி என்ற சொல்லுக்கு செல்வச் செழிப்பு என பொருள். மீன ராசியில்தான் சுக்ரன் உச்சம் பெறுகிறது. மேலும் மீனம் வியாழனின் ஆட்சி வீடாகவும் உள்ளதால் பொருளாதார முன்னேற்றம் உடையதாக உள்ளது.ரேவதி நட்சத்திரம் திருயக முகி நட்சத்திரங்களில் ஒன்றாகும். திருயக முகி என்பது வாய் வளைந்திருக்கும் நட்சத்திரங்கள். ரேவதி நட்சத்திரம் சமநோக்கு நாட்களை உள்ளடக்கிய நட்சத்திர தொகுப்பில் வருகிறது. ஆகவே, இந்த நட்சத்திர நாளில் வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது மற்றும் சாலைகளை அமைப்பது போன்ற வேலைகளை செய்வது சிறப்பாகும்.ரேவதி என்பது ஒரு அலி நட்சத்திரமாக உள்ளது. இதன் பொருள் யாதெனில், ஆண் மற்றும் பெண் பாலினத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது.காஷ்யப்ப முனிவர் மற்றும் தேவமாதாவான அதிதி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் 33 பேர். அதில், 12 ஆதித்யர்கள். இந்த பன்னிரெண்டு ஆதித்யர்களில் சூரியனின் தேவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இந்த பன்னிரெண்டு ஆதித்யர்கள் சூரியன், பர்ஜன்யா, மித்ரா, அம்சா, பூஷன், தாத்ரி, ஆர்யமன், பாகன், சாவித்ரர், வாமனன், விஷ்ணு ஆகியோர் ஆவார்கள்.
ரேவதி நட்சத்திர புராணம்
பிரம்மாவின் வம்சத்தில் வந்த ரைவதன் என்ற மன்னன் குகரத நாட்டின் அரசராக இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த மன்னனுக்கு பிறந்த பெண்ணின் பெயர்தான் ரேவதி. ரைவதன் வம்சத்தில் பிறந்த அனைவரும் மிக உயரமாக இருந்துள்ளனர். ஆகவே, ரேவதி திருமணப் பருவம் வர மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமானது. ரைவதன் மாப்பிள்ளையை தேடினான் தேடினான் தேடிக் கொண்டே இருந்தான். உரிய மணாளன் சரியாக அமையவில்லை. எவ்வாறு மாப்பிள்ளை தேடுவது என்ற சிந்தனையில் மூழ்கினான். முடிவில் மன்னன் ரைவதனுக்கு ஒரு சிந்தனை தோன்றியது. பிரம்மனிடமே நேரில் சென்று கேட்டு விடலாம் என முடிவெடுத்து, பிரம்மலோகம் சென்றான்.
ரைவதன், தன் மகள் ரேவதியையும் அழைத்துக் கொண்டு பிரம்ம லோகத்தை அடைந்தான்.
அச்சமயத்தில், அங்கு வேள்வி ஒன்று நடந்து கொண்டிருந்தது. பிரம்மா, சற்று இருக்குமாறு கூறவே, ரைவதன் காத்திருந்தான்.வேள்வி முடிந்து வந்து பிரம்மா ரைவதனிடம் என்ன விஷயம் எனக் கேட்டார். தன் பிரச்னையை எடுத்துரைத்தான். ரேவதிக்குரிய மணாளன் யார் என்பதை தாங்கள்தான் கூற வேண்டும் எனக் கேட்டான். பிரம்மா சிரித்துக் கொண்டே சொன்னார். ‘‘ ரைவதா! ஏமாந்து விட்டாயே! நீ இங்கு வந்த பொழுது பூமியல் கிருத யுகம் நடந்து கொண்டிருந்தது. வேள்வி முடிந்து இச்சமயம், கலியுகம் தொடங்கிவிட்டது. பூமியில் உள்ள காலமும் பிரம்ம லோகத்தில் உள்ள காலமும் வேறு வேறு இதை மறந்து விட்டாய். இனி ரேவதியை பூமியில் யாரும் மணம் செய்ய இயலாது. பூமியில் இப்போது பார். அனைவரும் உயரம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்’’ என்றார்.
ரைவதன் கலக்கத்துடன் ‘‘பிரம்ம தேவரே நீங்கள்தான் எங்களை ஆசீர் வதிக்க வேண்டும்.’’ என்றார். உடனே பிரம்ம தேவர், ‘‘ரைவதா, கவலை வேண்டாம். பூமியில் பத்தடி உயரம் கொண்ட பலராமன் என்பவர் பிறப்பார். அவர், இந்த ரேவதியை கலப்பையால் உயரத்தை குறைத்து மணப்பார்.’’ என பிரம்ம தேவன் கூறினார்.அதன்படி, பிரம்மா சொன்னபடியே பலராமன் தன் கலப்பையால் அடித்து ரேவதியின் உயரத்தை குறைத்து மணந்தார் என்கிறது புராணம்.இதுவே ரேவதியை மணந்த புராணம். இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில், பிரம்ம தேவன் (வியாழன்) குருவாக வருகிறார். இந்த ரேவதி அமர்ந்துள்ள நட்சத்திரம் மீன ராசியில் ஆகும். ரேவதி நட்சத்திரத்திற்கு தேவதை புதனாக வருகிறார். மேலும், மீனம் ராசிக்கு சப்தம ஸ்தானமாக வருவது கன்னி ராசி ஆகும். இதன் அதிபதி புதன் கணவனாக அமைந்தது சிறப்பாகும்.
பொதுப்பலன்கள்
ரேவதி நட்சத்திரக்காரர்கள் செலவுகள் செய்வதில் சில கருமிதனமும் சில நேரம் கஞ்சத்தனமும் உடையவர்களாக இருப்பர். இதனை இவர்கள் சிக்கனம் என நினைத்துக் கொள்வார்கள். இவர்கள் செல்வச் செழிப்பு உடையவர்களாக இருப்பார்கள். பிரச்னைகளை சமாளிப்பதிலும் பிரச்னைகளிலிருந்து நழுவிச் செல்வதிலும் வல்லவர்கள். ஆனால், பொறுப்புடையவர்களாக இருப்பார்கள். புத்திக் கூர்மையுடையவர்கள். இதில் சிலர் சட்ட வல்லுநர்களாகவும் இருப்பர்.
ஆரோக்கியம்
நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் கை, கால் நடுக்கம் உண்டாகும். இவர்களுக்கு சரியான உணவுப் பழக்கத்தை இவர்கள் மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்புகள் சிலருக்கும் சிலருக்கு சர்க்கரை நோய் பற்றிய அச்சமும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
ரேவதிக்குரிய வேதை நட்சத்திரம்
வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். மகம் என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. மகம் நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்குவது வேண்டாம்.
பரிகாரம்
இலுப்பை மரங்களை தலவிருட்மாக உள்ள பெருமாள் கோயில்களை வழிபடுவது சிறந்த பரிகாரம் ஆகும். இலுப்பை மர கன்றுகளை புதன் கிழமையிலோ அல்லது புதன் ஹோரையில் பெருமாள் திருத்தலங்களில் நட்டு வைப்பது சிறந்த பரிகாரம் ஆகும்.
