×

குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே யானை தந்தம் கடத்திய 5 பேர் சுற்றி வளைப்பு

போரூர், ஜூன் 18: திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே மர்ம நபர்கள் யானை தந்தத்தை பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட வனச்சரக அலுவலர் சுப்பையா, வனசரகர் அருள்நாதன் மற்றும் வனவர் ரவிக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் யானை தந்தம் இருப்பது தெரிய வந்தது. பின்னர் நடத்திய விசாரணையில், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் (39), முத்துக்குமார் (44), சாகிம் அகமது (31), குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அபிஜில்லா (55), வேலூரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து வன அலுவலர் சுப்பையா 5 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே யானை தந்தம் கடத்திய 5 பேர் சுற்றி வளைப்பு appeared first on Dinakaran.

Tags : Kuthambakkam New Bus Stand ,Porur ,Tiruvallur District Forest Department ,Thiruvallur district ,Tiruvallur District ,Forest ,Officer ,Subbaiah ,
× RELATED 800 ஏக்கர் பரப்பளவில் அறிவிக்கப்பட்ட...