×

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 47 உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு: உறவினர்களிடம் ஒப்படைப்பு

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 47 பயணிகளின் உடல் அடையாளம் காணப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் கடந்த 12ம் தேதி லண்டன் புறப்பட்டது. விமானம் பறக்க தொடங்கிய 30 விநாடிகளிலேயே அங்கிருந்த மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிலிருந்த பயணிகள் விமான ஊழியர்கள், விமானிகள் உள்பட 241 பேர் பலியாகி விட்டனர்.

இந்த விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விபத்தில் உயிரிழந்தார். 11 ஏ என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் மருத்துவ விடுதி மாணவர்கள், அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் என மொத்தம் 270 பலியாகி விட்டனர். விமானம் தீப்பிடித்து எரிந்ததில் உடல்கள் கருகி இருப்பதால், டிஎன்ஏ(மரபணு) சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை டிஎன்ஏ பரிசோதனையில் 47 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 24 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விபத்தில் இறந்தவர்கள் உதய்பூர், வதோதரா, கேடா, மெஹ்சானா, அகமதாபாத் மற்றும் போடாட் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்” என அரசு பிஜே கல்லூரி, மருத்துவமனையின் பேராசிரியர் ஒருவர் கூறினார்.

இந்நிலையில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி செய்தியாளர்களிடம் கூறுகையில், “விஜய் ரூபானியின் டிஎன்ஏக்கள் அவரது குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரியுடன் இன்று(நேற்று) காலை பொருந்தியது” என்றார். இதை்தொடர்ந்து விஜய் ரூபானியின் உடல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

* மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கிறோம் இங்கிலாந்து தம்பதியின் கடைசி வீடியோ
அகமதாபாத் விமான விபத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பியாங்கோல் கிரீன் லா ஜேமி மீக் என்ற ஒரே பாலின திருமண தம்பதியும் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தியாவில் இருந்து புறப்படும் முன் அவர்கள் சமூக வலைதளத்தில் வௌியிட்ட காணொலியில், “நாங்கள் விமானத்தில் ஏறுகிறோம். இந்தியாவில் இருந்து மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறோம்.” என பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

* தரை இறங்குதுன்னு நினைச்சேன்… வீடியோ எடுத்த சிறுவன் பேட்டி
அகமதாபாத் விமான விபத்தை ஆர்யன் அசாரி என்ற சிறுவன் தன் மொபைல் போனில் படம் பிடித்திருந்தான். இதையடுத்து அந்த சிறுவனை சாட்சியாக சேர்த்து, அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. ஆர்யன் கூறுகையில், “ 12ம் வகுப்பு புத்தகங்கள் வாங்க கடந்த 12ம் தேதி அன்று மதியம் 12.30 மணிக்கு அகமதாபாத்தின் மேகனி நகரில் உள்ள என் அப்பா வீட்டுக்கு வந்தேன்.
அப்போது தாழ்வாக விமானம் பறந்தது. அது தரைஇறங்குவதாக நினைத்தேன். ஆனால் என் கண் முன்னால் வேறு இடத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்து விட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை” என கூறினான்.

 

The post குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 47 உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு: உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Chief Minister ,Vijay Rupani ,Ahmedabad ,Air India ,Sardar Vallabhbhai Patel International Airport ,Ahmedabad, Gujarat… ,
× RELATED ஏர் இந்தியா விமான விபத்து இன்ஜினுக்கு...