×

பந்தலூர் கிளை நூலகத்தில் போட்டி தேர்வுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

பந்தலூர் : பந்தலூர் கிளை நூலகத்தில் போட்டி தேர்வுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.பந்தலூர் கிளை நூலகம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆல் தி சில்ட்ரன் அமைப்பு ஆகியன சார்பில் மத்திய, மாநில அரசுகளின் பணிக்கான போட்டி தேர்வுகள் எதிற்கொள்ளுதல் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பந்தலூர் நூலகர் அறிவழகன் தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நூலகர் நித்திய கல்யாணி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், ஆல் தி சில்ட்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஆல்பா பயிற்சி மைய முதல்வர் ரஞ்சன் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை சவீதா பல்கலை கழக எரிசக்தி துறை தலைவரும் ஆராய்ச்சியாளருமான முனைவர் அசோக்குமார் வீரமுத்து பேசும்போது, மாணவர்களுக்கு பெற்றோர் கொடுத்த மிகப்பெரிய செல்வம் கல்வியாகும்.

கல்வியில் பெரிய அளவில் அக்கறையுடன் படிக்க வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் பெரும்பாலும் உதவிதொகைகள் மூலம் படிக்க முடியும். புதிய ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முயற்சி செய்தால் சிறந்த எதிர்காலம் உள்ளது. கல்வியில் அக்கறை கொண்டு படித்தால் எல்லா இடங்களிலும் வெற்றி பெறலாம் என்றார்.

மேலும் மத்திய அரசு குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற சௌந்தர்யா பேசும்போது, என்னுடைய அப்பா வருவாய் துறையில் பணியாற்றிய போது அவருக்கு கிடைத்த மரியாதை என்னையும் அரசு பணிக்கு செல்லவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.

இதனடிப்படையில் நான் படித்து முயற்சி செய்து மாநில அரசு வருவாய் துறையில் பணியாற்றி வருகிறேன். எனினும் மத்திய அரசு பணியாளர் தேர்வு பெற கடந்த 5 ஆண்டுகள் முயற்சி செய்து தற்போது வெற்றி பெற்றுள்ளேன்.

போட்டி தேர்வுக்கு தயாராக அரசியல், மதம் இனம் சார்ந்து இல்லாமல் பொதுவான சிந்தையுடன் படிக்க வேண்டும். நான் முதல்வன் திட்டம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நல்லா படுக்கும் மணவர்களுக்கு உதவி தொகை வழங்கி ஊக்குவிக்கிறது. மாநில பாடத்திட்டம் மற்றும் மத்திய பாடத்திட்டங்கள் முழுமையாக படிக்க வேண்டும்.

மேலும் தினசரி செய்தித்தாள் செய்திகள் படிக்கும் போது, ஏன் எப்படி என புரிந்து கொண்டு படிக்க வேண்டும். மேலும் நாம் படித்த பாடங்களில் வெவ்வேறு வகைகளில் கேள்விகள் கேட்பார்கள். அதில் தைரியமாக எதிர் கொண்டால் எளிதில் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்றார்.

இதையடுத்து முதுநிலை வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் பேசும்போது, போட்டி தேர்வுக்கு தயாராகும் போது மொபைல் பயன்பாடு தவிர்க்க வேண்டும். அதுபோல இதர தேவையற்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் எளிதில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்றார். இந்நிகழ்ச்சியில் நூலக பணியாளர்கள், மற்றும் போட்டி தேர்வு மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பந்தலூர் கிளை நூலகத்தில் போட்டி தேர்வுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Pandalur Branch Library ,Pandalur ,Mahatma Gandhi Public Service Centre ,Children's Organization ,
× RELATED மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல்...