சென்னை: சித்தாமூர் அருகே பெயின்ட் அடிக்க பயன்படுத்தும் கெமிக்கல் திரவத்தை குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த தேவதூர் கிராமத்தில் வசித்து வருபவர் வினோத்குமார். இவருக்கு திருமணமாகி பிறைமதி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. பெயின்டரான வினோத்குமார் பெயின்ட் அடிப்பதற்கான தின்னர் என்ற கெமிக்கல் திரவத்தை வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பிறைமதி அந்த தின்னர் திரவத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை பிறைமதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தின்னரை குடித்து குழந்தை பலியான இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
