திருப்பூர்: திருப்பூர், இடுவாய் அடுத்த சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாநகரப்பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை கோர்ட் உத்தரவுப்படி கொட்டி அதனை தரம் பிரிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாநகர போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும், நேற்று மாலை பாஜவினர் தடையை மீறி குமரன் நினைவகம் முன்பு கூட தொடங்கினர். அதனை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவர் காரில் இருந்து இறங்காமல் ரூப் டாப் வழியாக ஏறி நின்று பொதுமக்களிடம் பேசினார். தடையை மீறி போராட்டத்தில் கலந்து கொண்டதையடுத்து அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். அப்போது, அண்ணாமலையை ஏற்றிய வேனை மறித்து பாஜவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீஸ் வேன் மீது ஏறி நின்று வேனின் முன்பக்க கண்ணாடி கூண்டை கையால் தாக்கினர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அண்ணாமலை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாஜவினரை கைது செய்து காலேஜ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுதலை செய்தனர்.
