திருவொற்றியூர்: ரூ.13 கோடியில் புனரமைக்கப்பட்ட மாதவரம் ஏரியில் படகு சவாரி சோதனை ஓட்டத்தை எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். மாதவரம் தொகுதி மண்டலம் 3, வார்டு 27, காமராஜர் சாலை அருகே உள்ள மாதவரம் ஏரி 67 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழைக்காலத்தில் சுற்று வட்டார உபரி நீர் இங்கு வந்து தேங்குவதால் மழை நீர் சேமிப்பாகவும், நிலத்தடி நீர் பாதுகாக்கும் ஏரியாகவும் பயன்பட்டு வருகிறது. இவ்வாறு உள்ள இந்த ஏரியை தூர்வாரி சீரமைத்து சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும், என்று மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.13 கோடியில் மாதவரம் ஏரி பகுதியில் இருக்கைகள், அலங்கார விளக்குகளுடன் நடைபாதை, விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, முகப்பு வளைவு என பல்வேறு அம்சங்களுடன் ஏரி சீரமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. மாதவரம் ஏரியை சுற்றுலா தளமாக மாற்றும் விதமாக படகு சவாரி தொடங்க சுற்றுலா துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், மாதவரம் ஏரியில் படகு சவாரி சோதனை ஓட்டம் நிகழ்ச்சி கவுன்சிலர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்து கொண்டு ஏரியில் படகு சவாரி சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்து செயற்பொறியாளர் ஆனந்தராவ், மண்டல குழு தலைவர் நந்தகோபால், கவுன்சிலர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகில் சென்று ஏரி முழுவதும் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாதவரம் ஏரி சுமார் ரூ.13 கோடியில் தூர்வாரி புனரமைத்து, சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நடைபாதை, மரம், அலங்கார செடிகள், விளையாட்டு பூங்கா போன்ற பல்வேறு வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படுகிறது. தற்போது இந்த ஏரியை சுற்றுலா தலமாக மாற்றும் வகையில் படகு சவாரி சோதனை ஓட்டம் நடந்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சென்னை மட்டுமின்றி பிற மாவட்ட மக்களுக்கும், சிறுவர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு தலமாக மாறும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
