சென்னையில் நான்கரை மணி நேரமாக அதிமுகவுடன் பாஜ நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: 30% இடங்களை கேட்டு பிடிவாதம்; ஓ.பி.எஸ், இபிஎஸ் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் சுமார் நான்கரை மணிநேரமாக அதிமுகவுடன் பாஜ நடத்திய
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 4 மாநகராட்சி மேயர் உள்பட 30 சதவீதம்
இடங்களை கேட்டு பிடிவாதம் பிடித்ததால் ஓ.பி.எஸ், இபிஎஸ் அதிர்ச்சி
அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் அதிமுக ஒதுக்கும் இடங்களை பார்த்து பாஜ
தலைவர்களும் அதிர்ந்து போயினர். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138
நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற
19ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை
தொடங்கியது. 2 நாட்களாக சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்புமனு
தாக்கல் செய்தனர். அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில்
மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்கள் திங்கட்கிழமைக்கு பிறகு வேட்புமனு
தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியான
திமுக, கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி,
விசிக உள்ளிட்ட கட்சிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர்
மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. அதே நேரத்தில்
எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவில் உள்ள ஒரே பெரிய கட்சி பாஜ தான்.
நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக
தற்போது அங்கு இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அவர்கள் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளனர். ஆனால், வேட்புமனு தாக்கல்
தொடங்கிய பின்னரும் அதிமுக தனது கூட்டணியில் உள்ள பாஜவை அழைத்து கூட்டணி
பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தது. இதனால், பாஜகவை கூட்டணியில் இருந்து
அதிமுக கழற்றி விட போகிறதா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால், அந்த அளவுக்கு
அதிமுகவை பற்றி சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாஜவை சேர்ந்த பல தலைவர்கள்
விமர்சித்தனர். குறிப்பாக பாஜ துணை தலைவரும், சட்டப்பேரவை பாஜ தலைவருமான
நயினார் நாகேந்திரன் அதிமுகவை ஒரு போராட்டத்தில் கடுமையாக விமர்சித்தார். அதாவது,
அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஆண்மை இல்லை என்று ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை
தெரிவித்தார். இது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவுக்கு கடும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக சார்பில் தக்க பதிலடி
கொடுக்கப்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து பாஜ தலைவர் அண்ணாமலை
ஓ.பி.எஸ், இபிஎஸ்ஸை தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு
வருத்தம் தெரிவித்தார். அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்
பாஜவில் இருந்து கொண்டு, அதிமுக குறித்து பேசுவதை அதிமுக தலைவர்கள்
விரும்பவில்லை. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு
பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டணியை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று
மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வந்தனர். இதனால், கூட்டணி
பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.இந்த நிலையில் சென்னை
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஸ், இபிஎஸ் மற்றும்
மூத்த தலைவர்கள் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக
அண்ணாமலை தலைமையில் பாஜவினர் நேற்று திடீரென பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்
ரெட்டி, தமிழக பாஜ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக பொறுப்பாளர்
பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் நான்கரை மணி நேரம்
நடந்தது. இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்தது. ஏனென்றால் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக
கருதப்படும் தொகுதிகளை குறி வைத்து அதிக இடங்களை பாஜ கேட்டது. அது
மட்டுமல்லாமல் கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய
மாவட்டங்களில் உள்ள 4 மாநகராட்சி மேயர் பதவிகளை வழங்க வேண்டும். 70
நகராட்சியில் தலைவர் சீட் தர வேண்டும் என்று பாஜ தரப்பில் கேட்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 70 சீட்
வழங்க வேண்டும். மொத்தத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் 30
சதவீதம் இடங்களை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாஜ தரப்பில்
வலியுறுத்தப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு செல்வாக்கான தொகுதிகளை கேட்டால் நாங்கள்
எங்கே போவது, நாங்கள் அந்த தொகுதிகளில் கஷ்டப்பட்டு கட்சியை
பலப்படுத்துவோம். நீங்கள் அந்த தொகுதிகளை கேட்டால் சரிப்பட்டு வராது. அது
மட்டுமல்லாமல் நாங்கள் வழங்கும் சீட்டில் தான் நீங்கள் போட்டியிட வேண்டும்.
மாநகராட்சி மேயர் பதவி குறித்து இப்போதைக்கு பேச வேண்டாம். வெற்றி பெற்ற
பின்னர் அது குறித்து பேசிக்கொள்ளலாம் என்றும் அதிமுக தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்று வந்தாலும் மேயர் உள்ளிட்ட பதவி
தரமுடியாது என்று அதிமுக தரப்பில் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அண்மைக்காலமாக பாஜவின் நடவடிக்கையால் சிறுபான்மையின மக்கள் கொதித்து
போய் உள்ளனர். தற்போது அவர்கள் நீங்கள் நின்றால் வாக்களிப்பார்களா என்று
யோசித்து பார்க்க வேண்டும். எனவே, நாங்கள் தரும் இடங்களை மட்டுமே
வாங்கி கொள்ளுங்கள் என்றும் அதிமுக தலைவர்கள் அப்போது தெரிவித்தனர். இதற்கு
பாஜ தலைவர்கள் ஏற்று கொள்ளவில்லை. பாஜவுக்கு செல்வாக்கு அதிகரித்து
உள்ளது. எனவே, அதிக இடங்களை தர வேண்டும் என்று பாஜ தலைவர்கள் தொடர்ந்து
வலியுறுத்தினர். ஆனால், அதற்கு அதிமுக தலைவர்கள் ஒத்து கொள்ளவில்லை.
இதனால், சுமார் நான்கரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித
உடன்பாடும் ஏற்படவில்லை. முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.பேச்சுவார்த்தைக்கு
பின்னர் பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக
அதிமுகவுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். இன்னும் பேச்சுவார்த்தை
தொடங்குவோம். பேச்சுவார்த்தையில் பின்னடைவு, சிக்கல் எதுவும் கிடையாது.
உள்ளாட்சி தேர்தலில் சிக்கலான வேலை என்பது போட்டியிடுவது தான். ஏனென்றால்
12,838 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. மாவட்ட செயலாளர்களிடம் பேசி
அவர்கள் முடிவை சொல்ல முடியும். அதனால் பேச்சுவார்த்தை என்பது நல்லப்படியாக
போய்க்கொண்டிருக்கிறது. அதிமுக பெரிய கட்சி. நகர்ப்புறத்தில் நிறைய
இடத்தில் பாஜ வலிமையாக இருக்கிறது. கூட்டணியில் இல்லாமல் 2011ல் தனியாக
நின்றபோது கூட நிறைய இடத்தில் பாஜ ெவற்றி பெற்று இருக்கிறது. சட்டமன்ற
தேர்தலை பொறுத்தவரை முதல்வர் யார் என்று தெரிந்து தேர்தலை சந்தித்தோம்.
அதிமுக பெருமளவிலான இடங்களில் நிற்க வேண்டும். ஆட்சி தொடர வேண்டும்
என்பதற்காக கூட்டணி இருந்தது. அப்போது இட பகிர்வு தொடர்பாக எந்த கசப்பும்
ஏற்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை பற்றி சொல்லியிருக்கிறோம். எங்களை
பொறுத்தவரை வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சட்டப்பேரவையிலும் சரி, மக்கள் மன்றத்திலும்  சரி ஆளுகின்ற திமுக அரசு
செய்கின்ற அனைத்து தவறுகளையும், அதிமுக தலைமையில்  மக்கள் மன்றத்தில்
வைத்து நிறைய கேள்விகளை நாங்கள் கேட்டு வருகிறோம். உள்ளாட்சி 
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 4ம் தேதி வரை நேரம் இருக்கிறது. தற்போது
முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்து இருக்கிறோம் என்றார்.* ஆஃபர் எது வேணாலும் பண்ணலாம் நாங்க தான் அக்சப்ட் பண்ணணும்: ஜெயக்குமார் பேட்டிமுன்னாள்
அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: பாஜவுடன் நான்கரை மணி நேரம்
பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்தது.
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். சில இடங்களை அடையாளம் செய்து கொடுத்து
இருக்கிறார்கள். பிரதான கட்சி என்கிற முறையிலும், கூட்டணிக்கு தலைமை
வகிக்கும் கட்சி என்று வரும் போது, தொடர்ச்சியாக இறுதி முடிவு வரும். ஆபர்
என்பது அவர்களின் கடமை, அக்சப்ட் என்பது எங்களின் கடமை. ஆபர் எது வேணாலும்
பண்ணலாம். எங்களுக்கு அக்சப்ட் என்று உள்ளது. அதில் எங்களது கட்சியின்
நலன், வேட்பாளர் நலன் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, எங்களுடைய கட்சி
நலன் பாதிக்காத வகையில்  முடிவு இருக்கும். தாய், தந்தை தெய்வங்களுக்கு
சமம். அதே போல தமிழ் தாய் வாழ்த்து என்பது ஒவ்வொருவரும் மரியாதை ெசலுத்த
வேண்டிய விசயம். அது உணர்விலேயே இருக்க வேண்டும். மரியாதை செய்யாததை
ரிசர்வ் வங்கி செய்தது என்பது, உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத விசயம்.
தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்யாததை ஒரு தாயை அவமதிப்பது போன்றது
என்பது தான் அதிமுகவின் கண்ணோட்டம். இவ்வாறு அவர் கூறினார்.* பேச்சுவார்த்தையில் கழட்டி விடப்பட்ட நயினார் நாகேந்திரன்சென்னையில்
பாஜ நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன்,
‘‘அதிமுகவில் ஆண்மையுள்ள எம்எல்ஏக்கள் யாரும் இல்லை’’என்று சர்ச்சைக்குரிய
கருத்தை தெரிவித்தார். இது கூட்டணியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு அதிமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. பிரச்னை விஸ்வரூபம்
எடுத்ததை அடுத்து பாஜ தலைவர் அண்ணாமலை ஓ.பி.எஸ், இபிஎஸ்ஸை தொடர்பு கொண்டு
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இதனால், கூட்டணி
பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுகவுடன்
பாஜ தலைவர்கள் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை
அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை
நடத்தினர். அண்ணாமலை தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் மூத்த தலைவர்கள்
கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் பாஜ சட்டப்பேரவை கட்சி
தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் பங்கேற்வில்லை. அவர் கழற்றி
விடப்பட்டார். ஓபிஎஸ், இபிஎஸ்சுடன் பேச்சுவார்த்தையில் நயினார்
நாககேந்திரன் இருந்தால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வேறு திசையை நோக்கி
சென்று விடும் என்று கருதி பாஜ தலைவர்கள் நயினார் நாகேந்திரனை
பேச்சுவார்த்தையில் தவிர்த்ததாக கூறப்படுகிறது….

The post சென்னையில் நான்கரை மணி நேரமாக அதிமுகவுடன் பாஜ நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: 30% இடங்களை கேட்டு பிடிவாதம்; ஓ.பி.எஸ், இபிஎஸ் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: