×

கோவை ஆர்.எஸ். புரம் உழவர் சந்தைக்கு பந்தல் காய்கறிகளின் வரத்து குறைவு

கோவை, மே 16: கோவை மாவட்டத்தில் மொத்தம் 8 உழவர் சந்தைகள் உள்ளது. அதில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ். புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, சுந்தராபுரம் மற்றும் குறிச்சி ஆகிய 5 இடங்களில் உள்ளது. இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் நேரடியாக வந்து தங்கள் காய் கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். ேநரடியாக விற்பனை செய்யப்படுவதால் காய் கறிகளின் விலை குறைவு. அதில் ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை கடந்த 2000ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் மொத்தம் 170 கடைகள் உள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ். குளம், காரமடை, அன்னூர், மதுக்கரை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, அவரைக்காய், புடலை, பீர்க்கன், சுரைக்காய், பாகற்காய், கொத்தவரை, பூசணி, அரசாணி உள்ளிட்ட பல்வேறு காய்களை காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சூலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து பந்தல் காய்கறிகள் எனப்படும் அவரைக்காய், பாகற்காய், பீர்க்கன் ஆகிய காய் வகைகள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இக்காய்களின் வரத்துகள் குறைந்து, விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இது குறித்து ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை விவசாயிகள் கூறியதாவது: இந்த உழவர் சந்தை மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக காய்கறிகளை விற்பனை செய்து வருகிறோம். பந்தல் காய்கறிகள் எனப்படும் அவரைக்காய், பீர்க்கன், சுரைக்காய் ஆகிய காய்களில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் இந்த காய்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள். பந்தல் காய்கறிகளில் ஒவ்வொன்றிலும் தினமும் 1500 கிலோ காய்கள் விற்பனைக்ககாக கொண்டு வரப்படும். ஆனால் இந்த கோடை காலத்தில் இந்த பந்தல் காய்கறிகளின் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. வெயில் காலங்களில் சாறு உறுஞ்சும் பூச்சிகள் அதிகமாக உற்பத்தியாகும். இந்த பூச்சிகள் பந்தல் காய்கறிகளை உண்டு உயிர்வாழும். எனவே பந்தல் காய்கறிகளின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. கோடை காலம் முடிந்தால் தான் பந்தல் காய்கறிகளின் உற்பத்தி அதிகரிக்கும். இவ்வாறு கூறினர்.

The post கோவை ஆர்.எஸ். புரம் உழவர் சந்தைக்கு பந்தல் காய்கறிகளின் வரத்து குறைவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Puram ,Coimbatore Corporation ,R.S. Puram ,Singanallur ,Vadavalli ,Sundarapuram ,Kurichi ,Coimbatore R.S. Puram Farmers' Market ,Dinakaran ,
× RELATED இந்திய மருத்துவ சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு