கோவை, ஜன.5: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையன்று, வீடுகளில் மட்டுமின்றி, கோயில்கள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மண் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். இதன் காரணமாக கோவையில் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மண் பானைகள் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பல வண்ணங்கள் பூசப்பட்ட சிறிய அளவிலான மண் பானைகள் முதல் பெரிய அளவிலான பானைகள் தயாரிக்கப்படுகின்றன.
இது குறித்து மண்பாண்ட விற்பனையாளர்கள் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு பானைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பானைகளுக்கு வண்ணங்கள் தீட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் பானைகளில் வாடிக்கையாளர்கள் கேட்கின்ற வகையில் வண்ணங்கள் தீட்டி தரப்படுகின்றன. முன்பெல்லாம் சில்வர்,பித்தளை பானைகளில் பொங்கல் வைத்து வந்த நிலையில், தற்போது பலரும் பாரம்பரியமான மண் பானைகளில் பொங்கல் வைப்பது அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மண் பானைகள் விற்பனையும் நன்றாக இருந்து வருகிறது.கல்லூரி மாணவர்கள், இளைய தலைமுறையினர்களும் மண் பானைகளை விரும்பி வாங்குகின்றனர். கல்லூரியில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அதிகளவிலான மண் பானைகளை வாங்கி செல்கின்றனர்.அதேசமயம் மண் பானைகள் செய்வதற்கான மண் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.
