×

பாலமலை அரங்கநாதர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா

பெ.நா.பாளையம், மே 14: கோவை பெரியநாயக்கன்பாளையத்திற்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற நூற்றாண்டு பழமையான பாலமலை அரங்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயில், சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பெருமாள் 7ம் தேதி அன்ன வாகனத்திலும், 8ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 9ம் தேதி கருடவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். 11ம் தேதி செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று மாலை தொடங்கியது.

இதில் முதலில் யானை வாகன உற்சவம், சின்னத்தேர் உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து பெருமாள் தேரில் எழுந்தருளி கோயிலின் மாடவீதிகளில் வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர். அதன்பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காலத்தில் அருள்புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கு பெற்ற நாட்டியஞ்சலி, பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாமசங்கீர்த்தன கோஷ்டியினரின் பஜனைகளும் நடைபெற்றன.

கோயில் விழாவிற்காக கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வசதி என அனைத்து துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் இன்று பரிவேட்டை, குதிரை வாகன உற்சவமும், 14ம் தேதி சேஷ வாகன உற்சவம், 15ம் தேதி சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்திருந்தார்.

The post பாலமலை அரங்கநாதர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Palamalai Aranganathar Temple Chithirai Therthirai Festival ,P.N.Palayam ,Palamalai ,Aranganathar Temple ,Western Ghats ,Periyanayakkanpalayam ,Coimbatore ,Chithirai Therthirai festival ,Perumal ,Anna ,
× RELATED இந்திய மருத்துவ சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு