மண்டபம்,மே 13: வேதாளை கடலோரப் பகுதியில் சாலைகள் மற்றும் மீனவர்களின் குடியிருப்பு பகுதியில் கடல் நீரால் ஏற்படும் அரிப்பை தடுப்பதற்கு, தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் அருகே வேதாளை கடலோரப் பகுதியில் சூடைவலை, சிங்கிவலை ஆகிய குடிசைப் பகுதிகளில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மீனவ குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி, கடலோரப் பகுதியின் அருகே அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கும் கடல் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தார்ச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோ வாகனங்கள் மீன்களை கொள்முதல் செய்யும் வாகனங்கள் என வந்து கொண்டே செல்லும். அதனால் அந்த சாலை எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் இந்த கடல் பகுதியில் அதிகமான சூறைக்காற்றுகள் வீசும் நாட்கள், கடல் அலை ஏற்படும் நாட்கள், கனமழை பெய்யும் நாட்களில் கடல் மட்டம் உயர்ந்து கடல் நீர் சாலையில் மோதி அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து விடும். சில நேரங்களில் குடிசைகளுக்குள் கடல் தண்ணீர் புகுந்து மணல் அரிப்பு ஏற்பட்டு குடிசைகள் சேதமடைந்து விடும். இதனால் இந்த பகுதியில் பாதுகாப்பு கருதி சாலையை பாதுகாக்க கடலோரப் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வேதாளை பகுதியில் சாலையை அரிக்கும் கடல் அலை: தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.
