இஸ்லாமியர் மீது வெறுப்பை பரப்ப முயற்சிப்பதா? மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சிதம்பரம்: இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை பரப்ப முயற்சித்துள்ள மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று அளித்த பேட்டி: மதுரை ஆதீனம், அவரது உயிருக்கு இஸ்லாமியர்களால் பாதுகாப்பில்லை என கூறியது அதிர்ச்சி அளித்தது.

இதுகுறித்து காவல்துறை சிசிடிவி வெளியிட்டதில் அம்மாதிரியான நிகழ்வு ஒன்றுமில்லை. இது தன்னிச்சையாக நடைபெற்ற விபத்து. அதிலிருந்து ஆபத்தின்றி தப்பித்துள்ளார். உயர்ந்த பொறுப்பில் உள்ள மடாதிபதி சமூக பதற்றம் ஏற்படாத வகையில் அமைதியை நிலை நாட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் அவர் கொலை செய்ய முஸ்லிம்கள் முயற்சித்தார்கள் என்றெல்லாம் சொல்லியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை பரப்புவதற்காக ஒரு முயற்சியை, சிறுபான்மை சமூகத்தினரை, இந்து சமூகத்தினருக்கு எதிராக தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதை குற்ற செயலாக மாற்றுவதற்கு முயல்கிறார். அவரது பேட்டியை சாதாரணமானது என கடந்து போய்விட முடியாது.

இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் திருவோணம் அருகே வடகாடு கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிற சமயத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதிதிராவிட பகுதிக்கு சென்று நூற்றுக்கணக்கான வீடுகளையும் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களையும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது, கண்டனத்துக்குரியது. இதில் காவல் துறையினர் சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post இஸ்லாமியர் மீது வெறுப்பை பரப்ப முயற்சிப்பதா? மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: