பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் மின்சார வாரிய உதவி பொறியாளரை கத்தியால் வெட்டியவர் கைது

நெய்வேலி, மே 6: மந்தாரக்குப்பத்தில் மின்சார வாரிய உதவி பொறியாளரை சரமாரியாக கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தில்லை ராஜன்(51), இவர் குறிஞ்சிப்பாடியில் மின்சார வாரியத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். தில்லைராஜன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வடலூர் சிதம்பரம் சாலையில் வாட்டர் பாட்டில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இதில் வடலூர் ராகவேந்திரா சிட்டி நகரைச் சேர்ந்த ராஜ் (54) என்பவர் தில்லைராஜன் வாட்டர் கம்பெனியில் மொத்தமாக வாட்டர் பாட்டிலை எடுத்து சில்லறை வணிகக் கடைகளுக்கு கொண்டு செல்ல ஒப்பந்தம் வாங்குவதற்காக ரூபாய் 9 லட்சம் பணத்தை தில்லைராஜனிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், ஒப்பந்தம் ராஜுக்கு கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ராஜ் கொடுத்த பணத்தை தில்லைராஜனிடம் கேட்டுள்ளார். அப்போது ரூபாய் 2 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளார். தொடர்ந்து ராஜ் மீதி பணத்தை தரும்படி தில்லைராஜனிடம் பலமுறை கேட்டுள்ளார். மேலும் தில்லைராஜன் வீட்டிற்கு ராஜ் சென்று மீதமுள்ள ரூ.7 லட்சம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது தில்லைராஜன் மற்றும் ராஜ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தில்லை ராஜனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் தில்லைராஜன் ரத்த வெள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தில்லைராஜன் மனைவி அம்சவல்லி மற்றும் அருகில் இருந்தவர்கள் தில்லைராஜனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தில்லைராஜன் மனைவி அம்சவல்லி மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் மின்சார வாரிய உதவி பொறியாளரை கத்தியால் வெட்டியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: