ஈ.டி, ஐ.டி.யை வைத்து ஒன்றிய அரசு அத்துமீறல் பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது: வைகோ பேட்டி

கோவை: ஈ.டி, ஐ.டி.யை வைத்து ஒன்றிய அரசு அத்துமீறி செயல்படுகிறது. பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது என்று வைகோ தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய உபகண்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 26 அப்பாவி உயிர்களை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். அதில் மனதுக்கு ஆறுதல் அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏராளமான சுற்றுலா பயணிகளை தாக்குதலில் சிக்காமல் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தனர். இது பெரிய அளவில் செய்தியாக்கப்படவில்லை. யுத்தம் தொடுக்க வேண்டும் என்ற கோணத்தில் ஒன்றிய அமைச்சர், பிரதமர் ஆகியோர் இருக்கின்றனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் குகைகளை கண்டறிந்து அவற்றை அழிக்க வேண்டும். நீட் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக கடுமையான முயற்சியை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, திமுக கூட்டணியில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தங்களுக்கு கிடைக்காது என கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘சிரித்துக்கொண்டே நல்லதுதானே. யார் சொன்னார்கள்.நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவன். என்னை கேபினட் மந்திரியாக்க விபிசிங் ஆசைப்பட்டபோது நான் ஏற்கவில்லை. வாஜ்பாய் கேபினட் அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தபோதும் ஏற்கவில்லை. மீண்டும் அத்வானியும், அடல் பிகாரி வாஜ்பாயும் எனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுப்பதாக நிர்பந்தப்படுத்தினார்கள். அதையும் ஏற்கவில்லை. கட்சியில் இருந்த மற்ற எம்.பி.க்களுக்கு அமைச்சர் பொறுப்பை பெற்றுக் கொடுத்தவன் நான்’ என்றார்.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு திமுக பயப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ, ‘பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை வைத்து ஒன்றிய அரசு அத்துமீறி செயல்படுகிறது. இதனால் அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. திமுகவில் யாரும் இதைப் பற்றி பயப்படவில்லை. அஞ்சவும் இல்லை. ஒன்றிய அமைப்புகளை இப்படி பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு கேடு’ என்றார்.

 

The post ஈ.டி, ஐ.டி.யை வைத்து ஒன்றிய அரசு அத்துமீறல் பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: