இதையடுத்து தமிழகத்தில் உள்ள 22 மாநில பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் பணியை தொடங்கியுள்ள தமிழக அரசு முதற்கட்டமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தர் தேடல் குழுவை அமைத்து அரசாணை கடந்த 2ம் தேதி வெளியாகி இருந்தன. இந்நிலையில் மேலும் மூன்று பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தரை நியமிப்பது தொடர்பான குழுவை தமிழக அரசு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாரதியார் பல்கலைக்கழகத்திற்கான தேடல் குழுவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி. டேவிடார், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் துரைசாமி மற்றும் திருவாசகம் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தர் தேடல் குழுவில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தீனபந்து, சுப்பையா மற்றும் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
இதுமட்டுமின்றி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தர் தேடல் குழுவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜோதி ஜகராஜன், பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தங்கராஜு மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்தாண்டு 4 உறுப்பினர்கள் கொண்ட தேடுதல் குழு அமைத்து ஆளுநர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனை திரும்ப பெற வேண்டும் என்று ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இருப்பினும், தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பாக அரசு ஏற்கனவே வெளியிட்ட அரசாணையை பின்பற்றி அரசிதழிலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பாரதியார், பாரதிதாசன், பெரியார் பல்கலை புதிய துணைவேந்தர் தேடுதல் குழு அமைப்பு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
