தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர் இன்று நீட் நுழைவுத்தேர்வு: செல்போன், முழுக்கை சட்டைக்கு தடை

சென்னை: 2025-26ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகான நீட் நுழைவுத்தேர்வு இன்று மதியம் நடக்கிறது. 2025-26ம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடக்கிறது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7ல் தொடங்கி மார்ச் 7ம் தேதியுடன் முடிந்தது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு மையத்திற்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதற்கு மேல் வருவோருக்கு அனுமதி கிடையாது.

கூடுதல் விவரங்களை //neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். சென்னையில் 44 மையங்களில் 21,960 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை.

முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலை முடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி, பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் வழக்கம் போல் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அதன் அருகே உள்ள தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

The post தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர் இன்று நீட் நுழைவுத்தேர்வு: செல்போன், முழுக்கை சட்டைக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: